
முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று காலை 8.45 மணிக்கு கோவையில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். தில்லியில் அமித்ஷாவை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமித்ஷா அழைப்பின் பேரிலேயே அவர் தில்லி செல்வதாகவும் கூறப்படுகிறது.
அண்ணாமலையும், தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனாவும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜூனா உத்தரகாண்டில் நடைபெறும் கூடைப்பந்து போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக 5 நாட்களுக்கு முன்னதாக தில்லி சென்று தங்கியுள்ளார்.
இப்போது அண்ணாமலையும் அங்கு செல்கிறார்.எனவே அவரும், ஆதவும் சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பாஜக கூட்டணிக்கு தவெகவை இழுப்பது அல்லது திமுக கூட்டணிக்கு எதிராக விஜயை தீவிரமாக களம் இறக்குவது என்று திட்டமிடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், அதிமுக, பாஜக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசிவருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரை அழைத்து எச்சரிக்கை செய்யவும் அமித்ஷா திட்டமிட்டிருந்ததாகவும்,அதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என்றும்,சந்திப்பின்போது அமித்ஷா அண்ணாமலையைக் கடுமையாக எச்சரிப்பார் என்றும் ஒரு தரப்பினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இதனால், விஜய் கட்சியை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அண்ணாமலை சென்றிருக்கிறாரா? அமித்ஷாவிடம் திட்டு வாங்குவதற்காகச் சென்றிருக்கிறாரா? என்கிற பட்டிமன்றமே தமிழ்நாடு பாஜகவில் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.இந்தத் தகவல்கள் கட்சியினரைத் தாண்டி வெளியில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


