செல்லூர் ராஜுவை எடப்பாடி அவமதித்தது ஏன்? – புதிய தகவல்கள்

எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.நேற்று எடப்பாடி பழனிச்சாமிக்கு, கீழடி எல்லையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

அதிமுகவினரின் வாழ்த்து முழக்கத்தைக் கேட்டதும் எடப்பாடி பழனிச்சாமி தனது மகிழுந்தை நிறுத்தினார். அவரிடம் செல்லூர் ராஜூ பூங்கொத்து மற்றும் சால்வையைக் கொடுத்து வரவேற்றுப் பேசினார். அவரைத் தொடர்ந்து கூடியிருந்த கட்சியினர் எடப்பாடிக்கு சால்வைகள் கொடுத்து வரவேற்றனர். அப்போது செல்லூர் ராஜூ, கூட்டத்தை விலக்கிக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமியின் காரில் ஏறி உட்கார்ந்து கொள்வதற்காகச் சென்றார்.

எடப்பாடியின் மகிழுந்து பின்புற கதவைத் திறந்து உள்ளே சென்று உட்கார முயன்ற போது, முன்இருக்கையில் இருந்த எடப்பாடியிடம் பாதுகாவலர்கள் சொல்ல, பின்னால் திரும்பி கையைக் காட்டியவாறு, ‘‘வேண்டாம்…. வேண்டாம்….. அண்ணே…. அண்ணே…. பின்னால அந்த வண்டில…. அதுல வாங்க… அதுல வாங்க, அடுத்த வண்டில வாங்கண்ணா…’’ எனக் கூறியபடி, தனது வண்டியில் ஏறவிடாமல் செல்லூர் ராஜூவைத் தடுத்து நிறுத்தினார்.

இதைச் சற்றும் எதிர்பாராத செல்லூர் ராஜூ, காரின் பின்புறக் கதவை மூடிவிட்டு, இறுகிய முகத்துடன் கூட்டத்திற்குள் இருந்து வௌியில் வந்தார். அப்போது மற்றவர்கள் எடப்பாடியை வரவேற்றுக் கொண்டிருந்தபோது செல்லூர் ராஜூ எடப்பாடியை கண்டுகொள்ளாமல் மனவேதனையில் திரும்பிச் செல்லும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் ப்ரவி வருகிறது.

எடப்பாடி அவமதித்தது குறித்து செல்லூர் ராஜூவிடம் கேட்டபோது, ‘‘எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பில் இருந்து இசட் பிரிவு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே என்னை காருக்குள் ஏற்றவில்லை. காரினுள் பாதுகாவலர்கள் இருந்ததால் அடுத்த காரில் ஏறிச் சென்றேன்’’ என்றார்.

இந்நிலையில் அண்மைக்காலமாகவே செல்லூர்ராஜுவை எடப்பாடி புறக்கணிப்பது ஏன் என்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.அவற்றில், மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்துமுன்னணி சார்பில் முருகன் மாநாடு நடந்தபோது, அதிமுக முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் இருந்து ரூ.200 கோடி கொள்ளை போனதாகவும், பாஜகவைச் சேர்ந்தவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் பாஜக வழக்குரைஞர் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவு வெளியிட்டார். அது செல்லூர் ராஜூவுக்குச் சொந்தமானது என்று தகவல் பரவியது. இந்தப் பணம் தேர்தல் செலவுக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்புப் பணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், செல்லூர்ராஜூ உறவினர் ஒருவர் தனது வீட்டில்தான் ரூ.45 இலட்சம் கொள்ளை போனதாக காவல்துறையில் புகார் அளித்தார். இதுதொடர்பாக செல்லூர் ராஜூவின் முன்னாள் ஓட்டுநர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவரத்தை தன்னிடம் உடனே சொல்லாததால் செல்லூர் ராஜூ மீது எடப்பாடி பழனிச்சாமி கடும் கோபத்தில் இருந்துள்ளார்.இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரை எடப்பாடி புறக்கணித்து வந்தார்.

காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லச் சென்றபோதுகூட செல்லூர் ராஜூவை அழைத்துச் செல்லவேண்டாம் என எடப்பாடி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் சிலர் மட்டுமே சென்றனர்.

அதோடு செல்லூர்ராஜு,சமீபத்தில் அளித்த பேட்டியில், ஓபிஎஸ் மற்றும் டிடிவிக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தும் பேசினார். இதுவும் எடப்பாடிக்கு அவர் மீது எரிச்சலை ஏற்படுத்தியது. இதுபோன்ற செயல்கள் தான் செல்லூர்ராஜூவை எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து புறக்கணிப்பதும், அவருக்குப் போட்டியாக உதயகுமார் மற்றும் சிலரை முன்னிறுத்தி வருவதாகவும் அதிமுகவினர் கூறுகின்றனர்.

இதனால் மதுரை மாவட்ட அதிமுகவில் குழப்பம் நிலவுகிறது.

Leave a Response