
அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதன் தலைமைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடனான
ஆலோசனைக் கூட்டம் மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து
ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது,
மதுரை மாநாட்டில் தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவை அறிவிப்போம். கட்சி நிர்வாகிகள் யாரும் எதிரணியினரை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது….
மதுரையில் செப்டம்பர் 4 ஆம் தேதி மாநிலம் தழுவிய மாநாடு நடத்தப்படும். அதில் பல முக்கிய கொள்கை
முடிவுகள் எடுக்கப்படும். அது வெற்றி மாநாடாகவும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் இணையும்
மாநாடாகவும் இருக்கும். மதுரை மாநாட்டுக்கு டிடிவி.தினகரன் மற்றும் சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தொண்டர்களை ஒருங்கிணைப்பதுதான் எங்கள் கொள்கை, அதில் வெற்றி பெறுவோம். திமுக ஆட்சியைத் துடைத்து எறிய அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். விஜய்க்கு எப்போதும் எங்கள் ஆதரவு இருக்கும். தற்போது வரை அவர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கட்சி தொடங்குவீர்களா? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறீர்களா? அதிமுகவை பாஜக விழுங்கி விடுமோ? என்றெல்லாம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, எங்களைப் பொறுத்தவரை அதிமுகதான் உயிர் நாடி இயக்கம். சட்டப்போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் தொண்டர்கள் வெற்றி பெறுவார்கள்.சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன.
எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் எத்தனையோ முதலைகள் விழுங்கப் பார்த்துள்ளன. ஆனால் அது நடைபெறவில்லை. அதிமுக எப்போதும் மக்கள் கட்சி
என்றார்.
இதில், சட்டப்போராட்டம் நடைபெற்றுவருகிறது அதில் தொண்டர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவர் சொல்லியிருப்பதும் செப்டம்பர் மாநாட்டில் சசிகலா,டிடிவி.தினகரன் ஆகியோருக்கு அழைப்பு என்று சொல்லியிருப்பதும் அவருடைய ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


