
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மார்ச் 25 ஆம் தேதி திடீரென டெல்லிக்கு சென்று இரவில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இருவரும் ஒன்றரை மணி நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.
அதன்பின், அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த உறுப்பினருமான செங்கோட்டையன் மார்ச் 28 அன்று சென்னையில் இருந்து மதுரை சென்றார். அங்கிருந்து அவசரமாக விமானம் மூலம் திடீரென டெல்லி சென்றார்.
டெல்லி சென்ற அவர், இரவு 7 மணிக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழ்நாடு தொழில் அதிபர்கள் ஸ்ரீதர், வெங்கட்ராமன் ஆகியோர் சென்றதாகக் கூறப்படுகிறது. இரவு நிர்மலா சீதாராமன் வீட்டில் செங்கோட்டையன் உணவு உண்டார்.
இந்தச் சந்திப்பு முடிந்ததும், நிர்மலா சீதாராமன், செங்கோட்டையன் ஆகிய இருவரும் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்தது என தகவல்கள் வெளியாகின. இவை அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.அவரை ஓபிஎஸ்,டிடிவிதினகரன் ஆகியோர் சந்தித்துப் பேசுகிறார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு குறித்து மர்மம் நீடிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சென்னை வந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் தனியாகச் சந்தித்துப் பேசினார் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னை சோழா நட்சத்திர விடுதியில் இந்தச் சந்திப்பு நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதிகாரப்பூர்வமற்ற இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாகவே கசியவிடுகிறார்கள்,இதன்மூலம் அதிமுகவுக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி தாங்கள் நினைத்ததைச் சாதிக்க பாஜகவினர் திட்டமிடுகிறார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


