
2026 சட்டமன்றத் தேர்தலில், பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைத்து அதனுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட பாஜக முயல்கிறது.இதற்கு ஒத்துவரவில்லை என்றால் ஒன்றிய ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டி அதைச் செய்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் முன் வைக்கப்படுகின்றன.
எல்லோரும் அறிந்த இந்த விசயத்துக்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதலோ வாக்குமூலமோ இதுவரை யாரிடமிருந்தும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியில் முக்கியமானவர்,முன்னாள் அமைச்சர்,தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருக்கும் ஆர்.பி.உதயகுமார், ஒரு நாளேட்டுக்கு நேர்காணல் கொடுத்துள்ளார்.
அதில் ஒரு கேள்வி…
கடந்த காலங்களில் அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டுள்ளதா?
இக்கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்…
பொதுவாக, பக்கத்து வீட்டுக்காரர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒன்றும் தவறு இல்லையே. இது மனிதநேயத்தின் அடிப்படைதானே. நம்மைச் சுற்றி இருக்கிற எல்லோரும், நன்றாக இருந்தால் தான், நாம் நன்றாக இருக்க முடியும் என்று நினைப்பது தவறில்லையே. அந்த அர்த்தத்தில் தான் இதனைப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் சொல்லியிருக்கிறார்.
இதன்மூலம் அதிமுகவின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடுகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அதேபோல்,
பாஜக-வை விட்டு விலகினால், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நம்மிடம் வரும் என்று பழனிசாமி போட்ட கணக்கு தப்பாகி விட்டதோ?
என்கிற ஒன்னொரு கேள்விக்கு,
அவர் போடும் கணக்கு எப்போதுமே தப்பாகாது. உப்பு விற்கப் போகும்போது, மழை பெய்தால் உப்பு கரைந்து விடும். அந்தச் சூழலில், மழை மீது தவறா, உப்பு வியாபாரி மீது தவறா? என்று விவாதிக்க முடியாது. அதே போல், உமி விற்கும்போது காற்றடித்தால், அதற்கு உமி மீதோ, காற்று மீதோ தவறு என்று கூற முடியாது. மழை பெய்யாமல், காற்றடிக்காமல் இருந்திருந்தால், இந்த வியாபாரத்தில் வெற்றி பெற்று பெரிய சாதனை செய்திருக்கலாம். இதனை காலச்சூழ்நிலை தான் முடிவு செய்கிறது. இந்த வியூகத்தில் சில பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். இது காலம் செய்த கோலமே தவிர வியூகத்தில் தவறு கிடையாது.
என்று கூறியிருக்கிறார்.
இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமி போட்ட அரசியல் கணக்குகள் தோல்வி அடைந்துவிட்டன என்று ஆர்.பி.உதயகுமார் ஒப்புக்கொண்டார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


