நேற்று (மார்ச் 14,2025) தமிழ்நாட்டின் 2025 – 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்படும். எனவே தேர்தலுக்கு முன்பாக திமுக அரசின் முழு நிதிநிலை அறிக்கை இது.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று முழக்கம் எழுப்பினர்.
ஆனால், எடப்பாடி வரிசைக்கு பின் வரிசையில் இருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து நிற்காமல், அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அவர் அருகே ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து இருந்தார். எடப்பாடி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு பேச அனுமதி அளிக்காததால், நிதிநிலை அறிக்கை உரையைப் புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
அப்போதும், தனது இருக்கையில் செங்கோட்டையன் அமைதியாக இருந்தார். இதைக் கவனித்த அதிமுக உறுப்பினர்கள் சிலர், செங்கோட்டையன் கையைப் பிடித்து வெளியே அழைத்துச் சென்றனர். அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்த சில நிமிடங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அறையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சமஉக்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், சமஉக்களும் கலந்து கொண்டனர்.
நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்வது, ஆளும் திமுக மீது குற்றச்சாட்டுகள் வைப்பது, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தையும் கட்சியின் மிக மூத்தவர்களில் ஒருவரான செங்கோட்டையன் புறக்கணித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக மூத்தவர்களில் மிக முக்கியமானவர் செங்கோட்டையன். கடந்த சில நாட்களாகவே அவருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கருத்து மோதல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடர்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டத்தையும் செங்கோட்டையன் புறக்கணித்திருக்கிறார்.இது அதிமுக நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.