
இந்தி ஆதிக்கத்திற்குத் தமிழகம் ஒருபோதும் பணியாது
என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களாக உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், இராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் வாழும் மக்கள் இந்திமொழிப் பேசுகிறார்கள். ஏறத்தாழ 40% மக்கள் பேசுகிற இந்தி மொழி இந்தியாவின் பெரும்பான்மை மொழியாகும் என்ற வாதத்தை இந்தித் திணிப்பாளர்கள் முன் வைக்கிறார்கள்.
ஆனால், உண்மையில் மேற்கண்ட மாநிலங்களில் பேசப்படுவது இந்தி அல்ல; பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. உத்திரப் பிரதேசத்தில் கரிபோலி, போஜ்புரி, அவதி, கன்னோஜி, பந்தேலி, பகேலி, பிரஸ்பாஷா ஆகிய மொழிகள் அங்கு மக்களால் பேசப்படுகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் மால்வி, நிமதி, பகேலி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
இராஜஸ்தானில் இராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி மொழிகள் பேசப்படுகின்றன.
அரியானாவில் அரியான்வி என்ற மொழிப் பேசப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் குடவாலி, குமோனி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
ஜார்கண்ட் மாநிலத்தில் சந்தாலி மொழிப் பேசப்படுகிறது.
இப்படி ஆங்காங்கே காலங்காலமாக இந்த மக்கள் மேற்கண்ட மொழிகளைத் தங்களது தாய்மொழிகளாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவை அத்தனையையும் இணைத்து அவையெல்லாம் இந்தியின் கிளை மொழிகள். ஆகவே இந்தி பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி என்ற வாதத்தை இந்தி வெறியர்கள் முன்வைக்கிறார்கள்.
மொகலாயர் ஆட்சி நடைபெற்றபோது, தில்லி கடை வீதியில் பல்வேறு மொழிகள் பேசுபவர்கள் அங்கு வந்துபோவார்கள். அப்போது இந்த மொழிகளின் கலப்பட மொழியாக உருவானது இந்தியா. அதற்கு பஜார்பாசா என்றுதான் மொகலாயர் காலத்தில் பெயர் சூட்டப்பட்டிருந்தது. கடைத்தெரு மொழியாக இருந்த இந்தி, இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும் என்றும், பெரும்பான்மை மக்கள் பேசுகிற மொழி என்றும், பிற மொழிகள் பேசுபவர்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் முனைந்து செயல்படுகிறார்கள்.
இந்தியாவின் தலைமையமைச்சர் மோடி, கூட்டங்களில் பேசும்போது அடிக்கடி தமிழ்மொழி இந்தியாவின் பழமையான மொழி என்று போற்றுகிறார்.அதுமட்டுமல்ல, அது உலகெங்கும் போற்றப்படும் ஒரு செம்மொழி என்றும் கூறுகிறார். ஆனால், இந்தித் திணிப்பு என்று வரும்போது மட்டும் இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு, இந்தியை அரியாசனத்தில் ஏற்றவேண்டும் என்று அவர்கள் முனைகிறார். இந்த கட்டத்தில் ஒன்றை நான் குறிப்பிட விரும்புகிறேன். தென்னாட்டு மொழிகள் அனைத்திற்கும் செம்மொழித் தகுதியை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. வேறு சில மொழிகளுக்கும் அளித்திருக்கிறது. ஆனால், இந்திக்குச் செம்மொழித் தகுதி அளிக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். சமற்கிருதத்திற்குச் செம்மொழித் தகுதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சமற்கிருதம் பேச, எழுதத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 130கோடி மக்களில் 25,000 பேருக்கும் குறைவானவர்கள்தான் அதைப் பேசுகிறார்கள். அதற்கு இந்திய அரசு பலஆயிரம் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிஅள்ளிக் கொடுக்கிறது.
தமிழ்நாடு உள்படத் தென் மாநிலங்கள் மற்றும் இந்திப் பேசாத மாநிலங்கள் அனைத்தும் இந்தியை கட்டாயப் பாடமாக்கவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்துகிறது. ஆனால், மும்மொழித் திட்டத்தின்படி, வட இந்தியாவில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மூன்றாவது மொழியாகத் தமிழ் அல்லது தென்னாட்டு மொழிகள் எதையாவது படிக்கவேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்களா என்றால் இல்லை. அந்த மாணவர்களுக்கு மொழிச்சுமை இரண்டு மொழியோடு நின்று விடுகிறது. மூன்றாம் மொழியை அவர்கள் ஒருபோதும் இன்றுவரையிலும் படிப்பதில்லை. வேண்டுமானால் சமற்கிருதத்தை மூன்றாவது மொழியாக வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்களே தவிர, இந்தியாவின் முதன் மொழியான தமிழை அங்கே மூன்றாவது மொழியாகப் படிக்கவேண்டும் என்று சொல்வதற்கு இந்திய அரசு முன்வரவில்லை. ஆக, அப்பட்டமான ஒரு மொழி ஏகாதிபத்தியத்தை இந்திப் பேசாத மக்கள் மீது திணிப்பதற்கு இந்திய அரசு முயலுகிறது.
மொழி என்பது பேச்சு, எழுத்து அதோடு அடங்கிவிடுவதில்லை. ஒரு மொழியின் அடிப்படையில்தான் அந்த மொழிப்பேசும் மக்களின் பண்பாடு உருவாகிறது. தமிழ் செம்மொழியாக விளங்குகிறது. இந்தியாவின் பழமையான மொழியாகத் திகழ்கிறது. அதைப் பேசும் மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் அது படிந்திருக்கிறது. அந்தத் தமிழர்கள் மீது இந்தியைத் திணிப்பதற்கு முயற்சி செய்தால் அதற்குப் பெயர் என்ன? ஆயிரக் கணக்கான ஆண்டுக் காலத்திற்கு மேலாகச் சமற்கிருதத்தைத் திணிப்பதற்குத் திட்டமிட்ட முயற்சி நடந்தது. ஆனால், அது ஒருபோதும் வெற்றிபெறவில்லை. தமிழ் தனது தனித்தன்மையை இன்றுவரையிலும் நிலைநிறுத்தி வருகிறது.
இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் தமிழ்தான் பேசப்பட்டது என்று நேரு, அம்பேத்கர் போன்றவர்களெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்; எழுதியிருக்கிறார்கள். ஆனால், எந்தவிதத்திலும் தகுதியற்ற ஒரு மொழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிப்பதற்குச் செய்யப்படும் முயற்சியை ஒருபோதும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
1938ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, முதன்முதலாக இந்தியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது திணிப்பதற்கு இராஜாஜி அவர்கள் முயற்சி செய்தார். அப்போது பெரியார் தலைமையில் தமிழறிஞர்களான சோமசுந்தர பாரதியார், கிஆ.பெ. விசுவநாதன், மறைமலையடிகள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போராட்டத்தில் நடராசன், தாளமுத்து ஆகிய இரு இளைஞர்கள் உயிர்த் தியாகம் செய்தார்கள். இதன் விளைவாக இந்தித் திணிப்பை இராஜாஜி திரும்பப் பெற்றார். பிற்காலத்தில் அதே இராஜாஜி அவர்கள் முதலில் இந்தியைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புங்கள் என்று சொன்னார். அதன் பொருள் என்ன? இந்தி இன்னும் வளம் இல்லாத மொழியாகத் திகழ்கிறது. அதை வளமாக்குவதற்கு வழியைப் பாருங்கள் என்று முகத்தில் அடித்தார்போல் சொன்னார் இராஜாஜி.
ஆகவே, இதற்கு முன்னால் இந்தியைத் திணிப்பதற்கு முதலாவது தலைமையமைச்சர் நேருவின் காலத்திலேயே இம்முயற்சி எடுக்கப்பட்ட போது, அதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது நேரு அவர்கள் நாடாளுமன்றத்தில் பின்வரும் வாக்குறுதியை அளித்தார். இந்திப் பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை இணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும் என்பதுதான் அந்த வாக்குறுதி ஆகும். பிறகு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் தலைமையமைச்சராக வந்தபோது, 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சிமொழியாகும் என்ற ஆணையை குடியரசுத் தலைவர் பிறப்பித்தபோது, அதற்கு எதிராக தமிழ்நாட்டு மாணவர்கள் கொதித்தெழுந்து போராடினார்கள். தமிழ்நாட்டு மக்களும் அந்தப் போராட்டத்தில் இறங்கினார்கள். தமிழ்நாடே கொந்தளித்தது. அதன் விளைவாக அகில இந்திய காங்கிரசுத் தலைவராக இருந்த காமராசர் தலையீட்டின் பேரில் தலைமையமைச்சர் லால்பகதூர் அவர்கள் நேருவின் வாக்குறுதிக்குச் சட்ட வடிவம் கொடுத்தார். இதையெல்லாம் அறிந்திராதவர்கள் இன்றைக்கு இந்தித் திணிப்பில் ஈடுபடுவது என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. இதை ஒருபோதும் தமிழகம் ஏற்காது என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


