கோவை, ஈரோடு, திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,916 கோடியில், அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.தற்போதுள்ள திமுக அரசு அதை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரம்பி இருப்பதால் தண்ணீர் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள், அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி நிறைவேற்ற காரணமாக இருந்தார் என்று சொல்லி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி பகுதியில் பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.
பாராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பரத நாட்டியம், கம்பத்து ஆட்டம், வள்ளிக் கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு பகுகிகளை சேர்ந்த எடப்பாடி அதிமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
அதன்படி, விழாவில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ச ம உக்கள் அம்மன் கே.அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி, முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி மற்றும் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் தனபால், அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பின் நிர்வாகிகள் நடராஜன், கணேஷ், சம்பத், பெரியசாமி, ரவிகுமார் மற்றும் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரும், அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பாராட்டு விழா மாநாட்டுக்கு வரவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி மீது அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.இந் நிலையில் எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவில் அவர் பங்கேற்கவில்லை என்பது அதை உறுதிப்படுத்தியிருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இவ்விழாவில் பாஜகவைச் சேர்ந்த ஜி.கே.நாகராஜ் கலந்து கொண்டதும் செங்கோட்டையன் புறக்கணித்ததும் பரபரபாகப் பேசப்படும் செய்தியாகியிருக்கிறது.