தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார். தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், கார் ரேஸிங்கிலும் ஈடுபட்டு வருகிறார்.
அவர் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம், வரும் பொங்கலன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில், அஜித் குமார் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது…
சமீபகாலமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீகமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க… அஜித்தே’ என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து, எனது பெயருடன் வேறெந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியளவும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.(ஏகே, அஜித், அஜித் குமார்) எனவே, பொது இடங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அசவுகரியம் ஏற்படுத்தும் இச்செயலை நிறுத்துவதற்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். எனது இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துகள். வாழு, வாழவிடு. இவ்வாறு அஜித் குமார் கூறியுள்ளார்.
அஜீத்தின் இந்த திடீர் அறிக்கையின் பின்னணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
டிசம்பர் எட்டாம் தேதி,திருப்பூா் மாநகா் மாவட்ட அமமுக சாா்பில் டிடிவி தினகரன் பிறந்த நாள் விழா மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் பரிசுகளை வழங்கினாா்.
பரிசுகள் வழங்கிவிட்டு அவர் உரையாற்றினார்.அப்போது கூட்டத்திலிருந்து கடவுளே அஜீத்தே என்கிற சத்தம் வந்துள்ளது.அந்த சத்தம் அவர் பேச்சுக்கு இடையூறாக இருந்திருக்கிறது.இது என்ன சத்தம்? என்று புரியாமல் குழம்பிய அவர், பேச்சை நிறுத்திவிட்டு மேடையில் இருந்தவர்களிடம் விளக்கம் கேட்டு தெரிந்து தலையிலடித்துக் கொண்டாராம்.
இந்நிகழ்வு நடந்து இரண்டு நாட்களில் அஜீத்திடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கிறது.
அதனால் அஜீத் அறிக்கை விட டிடிவி.தினகரனே காரணம் என்கிற செய்தி நடமாடத் தொடங்கியிருக்கிறது.
சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.