அதிமுகவின் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை, அவர் ஏற்கெனவே வகித்து வந்த அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு அதே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்…
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். அவர் அந்நிகழ்வில் கலந்துகொண்டது தொடர்பாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். எனவே, அவர் அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் மீண்டும் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்வு ஆர் எஸ் எஸ் அமைப்பின் பேரணி தொடக்கவிழாவாகும்.
அதில் கலந்து கொண்டதற்காகத்தான் அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இப்போது மீண்டும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
இது கடந்த சில வாரங்களாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமையவிருக்கிறது.இரு கட்சிகளும் இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றன என்கிற செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பாஜகவுடன் நெருங்கியிருப்பதன் காரணமாகவே பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்பு நிகழ்வில் கலந்து கொண்டதைப் பெரிதுபடுத்தாமல் மீண்டும் அவரை அதிமுகவில் சேர்த்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.