ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் தலைமையில்,
துணை மேயர் செல்வராஜ்
ஆணையாளர் டாக்டர்.மனீஷ் ஐஏஎஸ் ஆகியோர் முன்னிலையில் சாதாரண மாமன்ற கூட்டம் அக்டோபர் 25 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் அவரவர் வார்டுகளின் பிரச்சனைகளை பற்றி பேசினர்.அதற்கு, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஒன்றாவது மண்டலத் தலைவர் ப.க.பழனிசாமி பேசும்போது, திருச்சி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட நிகழ்வு, திருவள்ளூர் தொடர்வண்டி விபத்தின்போது விரைந்து மீட்பு நடவடிக்கை ஆகியனவற்றிற்றாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
அண்மை மழைவெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஈரோட்டிலிருந்து சென்னை வந்து பணியாற்றி முதலமைச்சரிடம் பாராட்டுப் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குப் பாராட்னு தெரிவித்ததோடு அவர்களுக்கு இம்மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்கி அவர்கள் தீபாவளி கொண்டாட உதவ வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
ஈரோட்டில் நான்கு தொடர்வண்டிப் பாதை மறிப்புகள் இருப்பதால் தொடர்வண்டி வரும் நேரங்களில் கர்ப்பிணிப்பெண்கள் உட்பட அனைவரும் அரைமணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழலை மாற்ற அவ்விடங்களில் மேம்பாலங்கள் கட்டக்கோரி சிறப்புத் தீ்ர்மானம் நிறைவேற்ற கோரிக்கை விடுத்தார்.
மாநகர் பகுதியில் மழைநீர் இறைக்கும் மின் இயந்திரங்களின் குதிரை சக்தியை 25 இலிருந்து 40 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிய அவர், மாமன்றக் கூட்டம் காலை 11 மணிக்குக் கூடாமல் பத்து மணிக்கே தொடங்கவேண்டும் எனவும் உறுப்பினர்கள் அனைவரும் நேரம்தவறாமல் பத்து மணிக்கே வந்துவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
அவருடைய இந்தக் கருத்துகளை மாமன்ற திமுக உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டி வரவேற்றனர்.
இவற்றைத் தாண்டி அதிமுக உறுப்பினர்களும் வரவேற்கும் வண்ணம் பேசினார்.
அது என்னவெனில்?
மாமன்ற அதிமுக உறுப்பினர் தங்கமுத்து அண்மையில் ஆணையாளரிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.பன்னீர் செல்வம் பூங்காவில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளை வேப்பமரக் கிளைகள் மறைக்கின்றன. அவற்றை நீக்கி சிலைகள் தெரியும்படி செய்யவேண்டுமெனக் கோரினார்.அவருடைய கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டது.இப்போது அந்தச் சிலைகள். நன்றாகத் தெரிகின்றன இது தான் திராவிட மாடல் என்று பேசினார்.
இதற்கு திமுக அதிமுக உறுப்பினர்கள் ஒட்டு மொத்த மாமன்றமும் வரவேற்புத் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.