2021 செப்டம்பர் 9 அன்று, அப்போதைய குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தால் தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.இரவி நியமிக்கப்பட்டார்.அவர் 2021 செப்டம்பர் 18 அன்று தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
அவர் பொறுப்பேற்று மூன்று வருடங்கள் முழுமையாக முடிவடைந்து நான்காமாண்டு தொடங்கியிருக்கிறது.
தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்றது முதலே தமிழ்நாடு அரசுடன் பல்வேறு வகைகளில் முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டேயிருந்தார் என்றும் அரசியல் சட்டப்படி நடந்து கொள்ளாமல் நாலாந்தர அரசியல்வாதி போல் நடந்துகொள்கிறார் என்றும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில்,தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிட நல்திருநாடு என்கிற சொல்லை விட்டுவிட்டுப் பாடியது பெரும் சர்ச்சையானது.
எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று அவர் சொன்னாலும் அவருடைய திட்டமிட்ட சதியே என்று பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இது தொடர்பாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது….
சென்னை தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் இரவி வழக்கம் போலத் தனது கோணல் புத்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
முதல்வர், ஆளுநர், குடியரசுத் தலைவர், தலைமையமைச்சர் போன்றவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அதிகாரிகளால் முன் ஒத்திகைகள் ஒருமுறைக்குப் பலமுறை பார்க்கப்படும். நிகழ்ச்சி நிரலின் ஒவ்வொரு பகுதியும் மிகக் கவனமாகப் பரிசீலனை செய்த பிறகே அந்நிகழ்ச்சி இறுதியாக நடத்தப்படும். ஆனால், ஆளுநர் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்பவரைப் போலத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். ஆனால் இந்த மறுப்பு ஏற்கத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டின் ஆளுங்கட்சிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் பலமுறை ஆளுநர் இரவி பலத்த கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறார். தன்மானமுள்ள வேறு யாராவது இப்பதவியில் இருந்தால், பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருப்பார்கள். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் கிடைத்துள்ள பதவி நாற்காலியை இழக்கச் சம்மதிக்காதவர்கள் ஆளுநர் இரவியைப் போலத்தான் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பார்கள்
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், இப்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவியை மாற்ற முடிவெடுத்திருக்கிறதாம் ஒன்றிய அரசு.
தொடர்ந்து சர்ச்சைக்கு ஆளாகும் வகையிலேயே நடந்து கொண்டிருப்பதால் ஆர்.என்.இரவியை மாற்றவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அதேசமயம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் 5 ஆண்டுகளைக் கடந்து பதவியில் உள்ள ஆளுநர்களை மாற்ற பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளதாகவும் ஒன்றிய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்படியிருப்பினும் ஆளுநர் ஆர்.என்.இரவியை மாற்றுவது மட்டும் உறுதி என்கிறார்கள்.