ஈரோடு நகராட்சி, 2008 ஆம் ஆண்டு மாநகராட்சியானது.அப்போது நகராட்சி எல்லை, 8.4 ச.கி.மீட்டர்.2010 இல் வீரப்பன்சத்திரம்,பெரியசேமூர்,சூரம்பட்டி,காசிபாளையம் நகராட்சிகளையும், பி.பெ.அக்ரஹாரம்,சூரியம்பாளையம் பேரூராட்சிகளையும்,எல்லப்பாளையம்,வில்லரசம்பட்டி,திண்டல்,முத்தம்பாளையம்,46 புதுார்,லக்காபுரம் ஊராட்சிகளையும் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டது. லக்காபுரம்,
46 புதுார் ஊராட்சிகள் இதற்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றாததால்,இரு ஊராட்சிகளை தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் ஈரோடு மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. இதன் மூலம், 109.52 ச.கி.மீ. பரப்பானது.
2011 கணக்கெடுப்பின்படி மாநகராட்சி மக்கள் தொகை, 4.98 இலட்சம்.நிர்வாக வசதிக்காகவும், மாநகராட்சி வருவாயை அதிகப்படுத்தவும்,மாநகரப் பகுதியில் இட நெருக்கடி நிலவுவதாலும்,மாநகராட்சியின் எல்லைப் பகுதியை விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
மாநகராட்சியையொட்டி உள்ள ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த எலவமலை,கதிரம்பட்டி,கூரபாளையம், மேட்டுநாசுவம்பாளையம்,பிச்சாண்டாம்பாளையம்,மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 46 புதுார், லக்காபுரம் என மொத்தம் ஏழு ஊராட்சிப் பகுதிகளை ஈரோடு மாநகராட்சியோடு இணைக்க முடிவு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஏழு ஊராட்சிகள் இணைக்கப்படும் பட்சத்தில்,மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை,60 இல் இருந்து, 75ஆக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
இந்த பரிந்துரைக்கு அந்த ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்,
அந்த மனு விவரம்…
அனுப்புநர்
மு.மனோகரன் த/பெ ரமுருகேசன். 155H, பச்சபாளி. மேட்டுநாசுவம்ப்பாளையம், சித்தோடு (அஞ்சல்) ஈரோடு -638102 นติ 8838427628
பெறுநர்
திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
ஈரோடு
பொருள் ஈரோடு ஒன்றியத்திற்கு உட்பட்ட எலவமலை மேட்டுநாசுவம் பாளையம், பேரோடு பிச்சாண்டம் பாளையம், கூரபாளையம் மற்றும் கதிரம்பட்டி ஆகிய 6 ஊராட்சிகளை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்பது தொடர்பாக
ஐயா.
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி. ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எலவமலை மேட்டுநாசுவம் பாளையம், பேரோடு, பிச்சாண்டம் பரளையம், கூரபாளையம், கதிரம்பட்டி ஆகிய 6 ஊராட்சிகளை ஈரோடு மாநகராட்சி இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு தலைவர் மற்றும் 10 முதல் 15 உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர். ஊராட்சியில் உள்ள இவர்கள் அனைவருமே அந்தந்த ஊராட்சிகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதநிதிகள். ஊராட்சித் தலைவருக்கு பல்வேறு அதிகாரங்கள் தரப்பட்டுள்ளன.
ஒரு மாநிலத்தில் உள்ள முதல்வருக்கு இருக்கும் அனைத்து அதிகாரங்களும் அந்த ஊராட்சி பொருத்தளவில் ஊராட்சித் தலைவருக்கு உண்டு. இதன் காரணமாக ஊராட்சியில் உள்ள குடிநீர் சாலை, குப்பை, போக்குவரத்து, தெருவிளக்கு, கல்வி, மருத்துவம், வீட்டு மனைகள் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு சமூக வளர்ச்சி போன்ற எண்ணற்ற பிரச்சினைகள் குறித்தும், தீர்மானிக்கவும். முடிவெடுக்கவும் அதற்கான செலவுகள் செய்யவும் கூடிய சுய அதிகாரங்கள் கொண்டவர்களாக அந்த ஊராட்சித் தலைவரும் ஊராட்சி பிரதிநிதிகளும் இருப்பர்.அனைவரும் கட்சிகளற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதநிதிகள் என்பதால் மேலே சொன்ன பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர்களை எளிதாக அணுகுவதும் அப்பிரச்சனைகள் குறித்து சரியான தீர்வுகளை பெறுவதும் எளிது.
ஆனால் ஒரு ஊராட்சி மாநகராட்சியில் இணைக்கப்படும்பொழுது அந்த ஊராட்சிக்கு ஒரு உறுப்பினர் கூட கிடைப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று ஊராட்சிகளுக்கு ஒரு உறுப்பினர் கிடைப்பார். அவருக்கு எந்த அலுவலகமும் இருக்காது என்பதோடு மேலே சொன்ன பிரச்சினைகள் குறித்து சுயமாக அவரால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அவ்வளவு எளிதில் அதற்கு தீர்வுகாணவும் முடியாது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் தனி அலுவலகம் இருக்கும் அதற்கான போதுமான நிதி ஒதுக்கப்பட்டிருக்கும். மேலும் நிதி தேவை எனில் கேட்டுப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான அதிகாரங்கள் ஊராட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.மாநகராட்சி உறுப்பினருக்கு தனி அலுவலகமோ தனி நிதி ஒதுக்கீடோ, உரிய அதிகாரமோ. எதுவும் இருக்காது எந்தவொரு சிறு பிரச்சினை இருந்தாலும்ம் மாநகராட்சியைத்தான் அணுக வேண்டும். மாநகராட்சி என்பது பெரும்பாலும் அரசு அதிகாரிகளைக் கொண்டு நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனம். அதிலிருந்து சாதாரண மக்களுடைய சாதாரண பிரச்சினைகளை கூட தீர்வுகாண முடியாது.
அந்த மாநகராட்சி உறுப்பினர் கட்சியால் நியமிக்க்கப்படுபவர். சட்ட விதிகளின் படி அவர் குறிப்பிட்ட சிறகம் (WARD) பகுதியில் குடியிருப்பவராக இருக்க வேண்டியதில்லை. மாநகராட்சியில் ஏதாவது ஒரு சிறகம் (WARD/ பகுதியில் வசிப்பவராக இருந்தால் போதும் ஆனால் ஊராட்சித் தலைவர் என்பவர் அந்த ஊராட்சியில் வசிக்க வேண்டும். மேலும் முன்பு சொன்னதுபோல் ஊராட்சியிலே அலுவலகம் இருக்கும், நிதி ஒதுக்கீடும் அதிகாரங்களும், சட்டப்படி கட்சி சார்பற்றவராக இருப்பார்.
ஊராட்சிகளில் வருடத்திற்கு 6 முறை கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் ஊராட்சியைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ள முடியும். அக்கூட்டத்தில் 27 அரசுத் துறைகள் சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கூட்டங்களில் கடந்த கூட்டத்திற்கும், இந்தக் கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் என்னென்ன பணிகள் நடந்தன. அதற்கான வரவு செலவு கணக்குகள் மற்றும் கடந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டனவா? இல்லை என்றால் காரண்ம் என்ன போன்ற அனைத்து விவரங்களையும் சபைக்குமுன் தெரிவிக்க வேண்டும். சபைகளில் மக்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு முறையான பதில்கள் தரவேண்டும் சபை எடுக்கும் முடிவே அனைத்து விடயங்களுக்கும் இறுதியானது.
சபை நினைத்தால் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழிற்சாலைகளைத் தடை செய்ய முடியும்.அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களுக்கே வேலைவாய்ப்பை வழங்க நிர்பந்திக்க முடியும். இதுபோன்ற எண்ணற்ற அதிகாரங்களைக் கொண்டவையாக கிராமசபை இருக்கும். ஆனால், இவை எதுமே மாநகராட்சியாக மாற்றப்படும்போது எந்த உரிமையும் மக்களுக்கு இருக்காது. ஆகவே, மேலே கூறிய காரணங்களால் இந்த 6 ஊராட்சிகளை ஈரோடு மாநகராட்சி உடன் இணைப்பது என்பது ஊராட்சி மக்களின் உரிமைகளையும், சுய அதிகாரங்களையும் தாங்களே தங்கள் பிரச்சினைகள் தீர்த்துக் கொள்ளும் உரிமை, தங்களுக்கான நிதியை தாங்களே வரிவசூல் செய்து பெற்றுக் கொள்ளும் உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை சுயமான செயல்பாடுகளை பறிப்பதாக ஆகிறது.
ஆகவே, மேலே சொன்ன ஊராட்சிகளை ஈரோடு மாநகராட்சி உடன் இணைக்க வேண்டாம் எனவும், அவ்வாறு இணைப்பது என்பது எங்கள் ஊராட்சி மக்களுக்கு மிப்பெறும் இழப்பையும், துன்பத்தையும் கொண்டு வரும். எக்காரணத்தை கொண்டும் மேற்கண்ட ஊராட்சிகளை ஈரோடு மாநகராட்சி உடன் இணைக்க வேண்டாம் என மக்களின் சார்பாக மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
7.10.2024
இணைப்பு மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியின் கிராமசபை தீர்மானத்தின்
நகல் மற்றும் ஊராட்சி மக்களின் கோரிக்கை நகல்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தந்த ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் போட்டு மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் மாநகராட்சியுடன் இணைத்தால் அம்மக்களின் அடிப்படை வாழ்வாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
மாநகராட்சியுடன் இணைப்பதால் வீட்டுவரி,சொத்துவரி,தண்ணீர் கட்டணம் பலமடங்கு உயரும்.
குப்பை,துப்புறவு வரி,பாதாள சாக்கடை வரி போன்றவை கூடுதலாகச் செலுத்த வேண்டிவரும்.
பெட்டிக்கடை,பல சரக்குக் கடை, இட்லிக்கடை போன்ற சிறு தொழில் செய்பவர்கள் கூடுதலாக வணிக உரிமக் கட்டணம் செலுத்தவேண்டும்.
விளைநிலங்கள் விற்பனை நிலங்களாக மாற்றப்பட்டு விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
எதிர்காலத்தில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் பலதூரம் சென்று தொழில் செய்யும் நிலைக்கோ அல்லது நகரம் சார்ந்த கூலித்தொழிலாளர்களாக மாறும் நிலை ஏற்படும்.
நிலமதிப்பு உயர்ந்து ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிலம் வாங்குவது கனவாகிவிடும்.
மேற்கண்ட காரணங்களால் மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்க்கும் மக்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 9 அன்று அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடத்துகின்றனர்.
எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என்கின்றனர்.