தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் – விவரங்கள்

தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 2022 மார்ச் 22 ஆம் தேதி, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2022 டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

இப்போது,தமிழ்நாடு அமைச்சரவை 5 ஆவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை நேற்று (செப்டம்பர் 28,2024) இரவு வெளியிட்ட அறிவிப்பு….

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை ஒதுக்குவதோடு, துணை முதல்வராகவும் பொறுப்பு வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநரிடம் பரிந்துரைத்துள்ளார். மேலும், வி.செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கவும் முதலமைச்சர் பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சர்களின் பதவியேற்பு விழா, இன்று (செப்டம்பர் 29) பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறுகிறது.

அதேநேரம், பால்வளத்துறை அமைச்சரான டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்குமாறு முதலமைச்சர் அளித்த பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுமட்டுமின்றி, அமைச்சர்களின் துறைகளை மாற்றம் செய்வது தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றப்படுகிறார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுகிறார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனுக்கு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பால்வளம், காதி, கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதிலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தின்படி இப்போது,முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சேர்த்து அமைச்சரவையின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து உள்ளது. சேலம் மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்ததால், ஆர்.ராஜேந்திரன் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். கொறடாவாக இருந்த கோவி.செழியன் அமைச்சராகிறார். இதனால் அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Response