முதலில் ஆதரவு இப்போது எதிர்ப்பு – நிதிஷ்குமார் முடிவால் பரபரப்பு

இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் பிரிவினையின் போது, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர்கள் இங்கு விட்டு சென்ற சொத்துகளை நிர்வகிக்க 1954 ஆம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன்பிறகு இந்தச் சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த நிலையில், வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களுடன் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு ஆகஸ்ட் 8 ஆம் தேதி தாக்கல் செய்தது.

வக்பு வாரியத்தில் முஸ்லிம் பெண்களைச் சேர்ப்பது, முஸ்லிம் அல்லாதவர்களும் இடம் பெறலாம் என்பது உள்ளிட்ட திருத்தங்கள் அதில் செய்யப்பட்டுள்ளன.

சச்சார் கமிட்டி பரிந்துரைப்படி இந்த சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மாஃபியா கும்பலின் பிடியில் இருந்து வக்பு வாரிய சொத்துகளை மீட்பதே இதன் நோக்கம் என்று ஒன்றிய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்ப ஒன்றிய அரசு பரிந்துரை செய்தது.

பாஜக பாமஉ ஜெகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்தச் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்து வருகிறது.

மசோதாவில் உள்ள அம்சங்கள் குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சியின் சிராக் பாஸ்வான், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுஆகியோர் ஏற்கெனவே கேள்விஎழுப்பினர்.

ஆனால், தே.ஜ. கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த மசோதாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தது. இக்கட்சியின் பாமஉ ராஜீவ் ரஞ்சன் இந்த மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திலும் பேசினார்.

இந்நிலையில், பிகார் முதலமைச்சரும், ஐஜத கட்சித் தலைவருமான நிதிஷ் குமாரை, மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான் சந்தித்து, வக்பு வாரிய சட்டத் திருத்தத்தில் உள்ள சில அம்சங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த சட்டத் திருத்தம் குறித்து முஸ்லிம்கள் அச்சம் தெரிவிப்பதாக, முதலமைச்சருக்கு நெருக்கமான நீர்வளத் துறை அமைச்சர் விஜயகுமார் சவுத்ரியும் கூறியுள்ளார். ஐஜத கட்சியின் இதர தலைவர்கள், சமஉ குலாம் கவுஸ் உள்ளிட்டோரும் இதுதொடர்பாக சில சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ஐஜத செயல் தலைவர் சஞ்சய் ஜா, சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் மொகத் ஜமா கான்ஆகியோர், ஒன்றிய அமைச்சர் கிரிண் ரிஜிஜுவை சந்தித்து வக்புவாரிய சட்டத் திருத்தத்துக்கு மாநிலத்தில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

பிகாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கஉள்ளது. அம்மாநில மக்கள்தொகையில் 18 விழுக்காடு பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தேர்தலைக் கருத்தில் கொண்டு தற்போது ஆளும் நிதீஷ்குமார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.இதனால் பாஜகவுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.இது பீகாரோடு நிற்குமா தில்லி வரை போகுமா என்பது போகப் போகத்தான் தெரியும் என்கிறார்கள்.

இது பீகார் அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கூட்டணியில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டே ஒரு முக்கியமான நேரத்தில் பாஜகவைக் காட்டிக் கொடுப்பதுபோல் நிதிஷ்குமார் நடந்து கொள்கிறார் என்று பீகார் பாஜகவினர் அதிருப்தியில் இருக்கின்றனர். இதனால் அம்மாநில அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது என்கிறார்கள்.

Leave a Response