இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் வலுவான பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா.இந்தியாவுடன் நீண்டகால நட்பு கொண்டிருந்த இவர்,1996 ஆம் ஆண்டிலும் பின்னர் 2009 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 15 ஆண்டுகளும் பிரதமராக நீடிக்கிறார். இவரது அவாமி லீக் கட்சி தொடர்ந்து 3 முறை ஆட்சி அமைத்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொதுத்தேர்தலைச் சந்தித்தது. இந்த முறை, ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி நிலவியது. ஷேக் ஹசீனாவுக்கு சாதகமில்லாத சூழலில், தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியினரை குறிவைத்து அரசியல் கொலைகள் அரங்கேறின. இதன் காரணமாக பிரதான எதிர்க்கட்சிகள் தேர்தலை முற்றிலும் புறக்கணித்தன.
அரசியல் கட்சிகளின் எதிர்ப்பே இல்லாமல் பொதுத்தேர்தலைச் சந்தித்த ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார்.
இந்தச் சூழலில், வங்கதேச உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வர ஹசீனா தலைமையிலான அரசு முடிவு செய்தது. பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971 இல் நடந்த போரில் வெற்றி பெற்று வங்கதேசம் என்கிற தனி நாடு உருவானது. இப்போரில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்க 2018 இல் முடிவு செய்யப்பட்டது.
இடஒதுக்கீட்டால் அவாமி லீக் கட்சியினரே ஆதாயம் அடைவார்கள் எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்த இடஒதுக்கீடு முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பிறகு உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மீண்டும் சமீபத்தில் இச்சட்டத்தை ஹசீனா அரசு கொண்டு வருவதாக அறிவித்ததால் கடந்த மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது. இத்துடன் ஹசீனா மீதான மக்களின் அதிருப்தியும் இணைந்து போராட்டம் வலுவடைந்தது.
தேர்தலுக்கு முன்பாக நடந்த அரசியல் கொலைகள், கைது நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டும், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டுமென போராட்டத்தின் நோக்கம் முழுக்க முழுக்க ஹசீனாவுக்கு எதிராக மாறியது. பல இடங்களில் மாணவர்களும், ஆளும் கட்சியினரும் மோதிக் கொண்டனர். இதனால் வன்முறை வெடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதற்கிடையே, இடஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
ஆனாலும், தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாணவர் அமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்திருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள், பேச்சுவார்த்தை நடத்த மறுப்பு தெரிவித்து கடந்த 3 ஆம் தேதி மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 2 நாட்களாக நடந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நாடு முழுவதும் போராட்டம் தீயாக பரவியது. ஹசீனா பதவி விலக வேண்டுமென கோரிக்கை வலுத்தது. தலைநகர் டாக்கா நோக்கி நீண்ட பேரணி நேற்று நடத்தப்படும் என மாணவர் அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தலைநகர் டாக்காவில் நேற்று நடந்த போராட்டத்தில் சுமார் 4 இலட்சம் பேர் ஒன்று கூடினர். நிலைமை கைமீறிப் போன நிலையில், பிரதமர் பதவியை இரகசியமாக இராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா. அத்துடன் அவர் தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டை விட்டு வெளியேறினார். இராணுவ ஹெலிகாப்டரில் பிரதமர் மாளிகையில் இருந்து தப்பிய அவர்கள், திரிபுரா மாநிலம் அகர்தலா வந்தடைந்து அங்கிருந்து இலண்டன் செல்லத் திட்டமிட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் டெல்லி அருகே ஹிண்டன் விமான தளத்திற்கு ஹசீனா வங்கதேச விமானப்படையின் சி130 சரக்கு விமானத்தில் மாலை 6 மணி அளவில் வந்திறங்கினார். அங்கிருந்து அவர் இந்தியாவில் இரகசியமான இடத்திற்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
ஹசீனா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை இராணுவம் ஏற்றுக் கொண்டது. இதுதொடர்பாக தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய இராணுவத் தலைவர் வக்கார் உஸ்-ஜமான், ‘‘நாட்டின் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்கிறேன். அனைவரும் தயவுசெய்து ஒத்துழைக்க வேண்டும். வன்முறையைக் கைவிட வேண்டும். அனைவருக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் அவசரநிலை எதுவும் பிரகடனப்படுத்தப்படவில்லை. விரைவில் இடைக்கால அரசு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு தப்பிய தகவல் கிடைத்ததும், நாடு முழுவதும் சாலைகளில் திரண்ட மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பலரும் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அதே சமயம், ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பிரதமர் மாளிகையைக் கைப்பற்றி உள்ளே நுழைந்தனர். பிரதமர் மாளிகையைச் சூறையாடிய அவர்கள், அங்கிருந்த பொருட்களைத் தூக்கிச் சென்றனர்.ரிக்சாக்களை எடுத்து வைத்து கையில் கிடைத்த பொருட்களை மக்கள் எடுத்துச் செல்வது போன்ற பல்வேறு காணொலிகள் வெளியாகி உள்ளன. பிரதமரின் கார் உள்ளிட்ட வாகனங்களை தீ வைத்து எரித்தனர். அமைச்சர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டாக்காவில் உள்ள அவாமி லீக் கட்சியின் தலைமை அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இரண்டாண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் தப்பி ஓடினர். இப்போது 5 ஆவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்ற ஹசீனா தப்பி ஓடியுள்ளார்.
அடுத்து யார்?