பிணை மனு விசாரணை நடக்காமல் பார்த்துக் கொள்கிறது ஈடி – செந்தில்பாலாஜி தரப்பு காட்டம்

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14 ஆம் தேதி அன்று கைது செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜிக்கு பிணை கிடைக்கவில்லை.

பல்வேறு நீதிமன்றங்களில் பிணை கிடைக்காததால் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார் செந்தில் பாலாஜி.

இந்நிலையில் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கைத் தள்ளி வைக்க வேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜி ஜாமீ்ன் கிடைக்காமல் சிறையில் உள்ளார். இந்த வழக்கை அமலாக்கத் துறை வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த வழக்கைத் தள்ளி வைக்க வேண்டுமென கோரப் போகிறார்கள் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம் என காட்டமாகத் தெரிவித்தனர்.

செந்தில் பாலாஜி தரப்பின் எதிர்ப்புக்குப் பிறகும், நீதிபதிகள் இந்த வழக்கை நாளைக்கு (ஜூலை 12) தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

விசாரணை நடந்தால் நிச்சயம் பிணை கிடைத்துவிடும் என்பதால் விசாரணையே நடக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்று செந்தில் பாலாஜி தரப்பினர் சொல்கிறார்கள்.

Leave a Response