ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், மொபைல் கட்டணங்களை உயர்த்தி அறிவித்துள்ளது. இது ஜூலை 3 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு மொபைல் அழைப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 15 முதல் 17 விழுக்காடு வரை கட்டணம் உயரும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஜியோ நிறுவனம் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
அடிப்படைக் கட்டணமான ரூ.155 திட்டத்தில் 28 நாட்களுக்கு அளவற்ற அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி டேட்டா பயன்படுத்தலாம். இது ரூ.189 ஆக உயர்கிறது.
இதுபோல், 28 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் கட்டணம் ரூ.209 இல் இருந்து ரூ.249 ஆகவும், 1.5 ஜிபி, அளவில்லா அழைப்புகள் ரூ.239 இல் இருந்து ரூ.299 ஆக உயர்கிறது. ரூ.399 மாதாந்திர கட்டணம் ரூ.449 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் 56 நாட்களுக்கான பிரீபெய்டு திட்டங்களுக்கு ரூ.479 இல் இருந்து ரூ.579, ரூ.533 இல் இருந்து ரூ.629 ஆகவும், 84 நாட்களுக்கான கட்டணம் 6 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் ரூ.479 (பழைய கட்டணம் ரூ.395), தினமும் 1.5 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் ரூ.799 (ரூ.666), 2ஜிபி திட்டம் ரூ.859 (ரூ.719), 3 ஜிபி திட்டம் ரூ.1,199 (ரூ.999) ஆக உயர்கிறது.
ஆண்டுத் திட்டத்தில் (336 நாட்கள்) ஆண்டுக்கு 24 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் ரூ.1,559 இல் இருந்து ரூ.1,899 ஆகவும், தினமும் 2.5 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் (365 நாட்கள்) ரூ.2,999 இல் இருந்து ரூ.3,599 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் கூடுதல் டேட்டாவுக்கான ஆட்-ஆன் திட்டக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
போஸ்ட் பெய்டு திட்டத்தில் மாதம் 30 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள்ரூ.299 இல் இருந்து ரூ.349, மாதம் 75 ஜிபி மற்றும் அளவில்லா அழைப்புகள் ரூ.399 இல் இருந்து ரூ.449 ஆக உயர்கிறது. இதுமட்டுமின்றி, நாள் ஒன்றுக்கு 2 ஜிபிக்கு மேல் உள்ள திட்டங்களில் மட்டுமே அளவில்லா 5 ஜி பலன்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இதுபோல், அழைப்புகள், பைல்கள் ஜியோ சேஃப் , ஜியோ டிரான்ஸ்லேட் என இரண்டு புதிய சேவைகளையும் இந்த நிறுவனம் துவக்கியுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் இந்த திடீர் கட்டண உயர்வு அறிவிப்பால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.