கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்குச் சொந்தமான ரூ 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப் பதிவு செய்துள்ளனர் என கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
இதேபோல, கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதரும் போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.இந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பதால் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தலைமறைவானார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
அதோடு, முன்பிணை கோரி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜூன் 12 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து 12 நாட்களுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்து வரும் விஜயபாஸ்கரைக் கைது செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அவர் காஷ்மீரில் பதுங்கி இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் பக்கத்து மாவட்டமான திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகி ஒருவரின் பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
எனவே தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல்லுக்கு விரைந்துள்ளனர். அதேபோல் இன்னொரு குழுவினர், வடமாநிலங்களில் முகாமிட்டு இருக்கலாம் என எண்ணி அங்கு சென்றுள்ளனர்.
இதனிடையே இந்த வழக்கில், முன்பிணை கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விஜயபாஸ்கர் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்கு மேலிமுறையீடு செய்து அதில் முன்பிணை கிடைத்தால்தான் அவர் வெளியே வருவார் என்று சொல்லப்படுகிறது.
ஆனால்,தனிப்படையினரால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற தகவலால் கரூர் அதிமுகவினர் பதட்டத்தில் இருக்கின்றனர்.