தமிழ்நாட்டில் மீண்டும் சாதனை படைத்த திமுக கூட்டணி

இந்திய ஒன்றியத்தின் 18 ஆவது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாடு, புதுச்சேரியைப் பொறுத்தவரை, திமுக தலைமையில் காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணி, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, அதிமுக, தேமுதிக இணைந்து ஒரு கூட்டணி, நாம் தமிழர் கட்சி தனியாக என 4 முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 மையங்களிலும், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதே, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டதால், காலை 9 மணி முதலேமுன்னிலை நிலவரம் வெளியாகத் தொடங்கியது.

தொடக்கத்தில்,தர்மபுரி,விருதுநகர் உள்ளிட்ட ஒரு சில தொகுதிகளில் எதிர்க்கட்சியினர் முன்னிலை வகித்தனர். மாலை 3 மணி அளவில், அனைத்துத் தொகுதிகளும் திமுக கூட்டணி வசமாகின.இறுதி நிலவரப்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக, காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி கைப்பற்றியது.

உதயசூரியன் சின்னத்தில் கொமதேக வேட்பாளர் போட்டியிட்ட நாமக்கல் உட்பட 22 தொகுதிகளில் திமுகவும்,புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் காங்கிரசுக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளும் திமுக கூட்டணி வசமாகியுள்ளன.

2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றியது. 2019 தேர்தலில் தேனி தவிர்த்து மற்ற 39 தொகுதிகளையும் வசமாக்கியது. தற்போது மீண்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.

Leave a Response