ஓ.பன்னீர்செல்வத்துக்கு கரும்புவிவசாயி சின்னம்

18 ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலை நேற்று இரவு 8 மணிக்கு மேல் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் 152 சுயேச்சை சின்னங்களில் அவர்கள் கேட்ட சின்னம் ஒதுக்கப்படும் என்றும், ஒரு சின்னத்தை 2 சுயேச்சை வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

மதிமுகவுக்கு அவர்கள் கேட்ட பம்பரம் சின்னம் தரப்படவில்லை. அதற்கு பதிலாக மதிமுகவுக்கு ‘தீப்பெட்டி’ சின்னம் ஒதுக்கப்பட்டது.

அதேபோல், இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாளி சின்னம் கேட்டார். அதே சின்னத்தை அங்கு சுயேச்சையாகப் போட்டியிடும் மற்ற பன்னீர்செல்வங்களும் கேட்டதால், குலுக்கல் அடிப்படையில் மற்றொருவருக்கு ஒதுக்கப்பட்டது. கடைசியாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு சுயேச்சை சின்னமான ‘பலாப்பழம்’ சின்னம் ஒதுக்கப்பட்டது.

அந்தத் தொகுதியில் 6 பன்னீர்செல்வங்களுக்கும் ஒதுக்கப்பட்ட சின்னங்கள் விவரம்…

1. ஒ. பன்னீர்செல்வம்
த/பெ.ஒட்டக்கார தேவர்
பெரியகுளம். தேனி மாவட்டம்.
பாஜக கூட்டணி
பலாப்பழம்

2. ஒ பன்னீர்செல்வம்
த/பெ.ஒச்சப்பன்
மேக்கிழார்பட்டி .உசிலம்பட்டி
மதுரை மாவட்டம்
சுயேச்சை
கரும்பு விவசாயி

3.ஒ.பன்னீர்செல்வம்
த/பெ.ஒய்யாரம்
தெற்கு காட்டூர். வாலாந்தரவு
இராமநாதபுரம் மாவட்டம்
சுயேச்சை
கண்ணாடிடம்ளர்

4.ஒ.பன்னீர்செல்வம்
த/பெ.ஒச்சாத்தேவர்
வாகைகுளம் .திருமங்கலம்
மதுரை மாவட்டம்
சுயேட்சை
வாளி

5.ஒ.பன்னீர்செல்வம்
த/பெ.ஒய்யா தேவர்
இந்திரா நகர் .சோலை அழகுபுரம்
மதுரை மாவட்டம்
சுயேச்சை
திராட்சை

6.பன்னீர்செல்வம்
த/பெ.மலையாண்டி
கங்கைகொண்டான்.பரமக்குடி
இராமநாதபுரம் மாவட்டம்
சுயேச்சை
பட்டாணி

இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் ஒரு ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாம் தமிழர் கட்சியின் முன்னாள் சின்னமான கரும்புவிவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response