
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை 31.01.16 இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அற்புதம் அம்மாள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
செய்யாத குற்றத்துக்காக கடந்த 25 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரி, தண்டனை அளித்த நீதிபதி, சிறைக் கண்காணிப்பாளர் என அனைவரும், அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு இவர்களின் விடுதலையை எதிர்த்ததால் அது நின்று போனது. அதன்பின் அமைந்த மோடி அரசும், இவர்களின் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்காக சட்டப்படி போராடி வருகிறோம். அண்டை மாநிலங்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 14 ஆண்டுகள் முடிந்ததும் விடுவிக்கப்படுகின்றனர். ஆனால், ராஜீவ் கொலை வழக்கால், தமிழகத்தில் நீண்ட காலம் சிறையில் உள்ள மற்ற கைதிகள் விடுதலை ஆக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிணையில் வருவதற்கு பேரறிவாளனுக்கு விருப்பமில்லை. நிரபராதி என தெரிந்தபின், முழு விடுதலை பெற்று வெளியில் வரவே அவர் விரும்புகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் அரசியலமைப்புச் சட்டம் 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவ்வாறு விடுதலை செய்தால் அதில் மத்திய அரசு தலையிட முடியாது என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது என்றார்.
இப்பேட்டியின்போது, தமிழினப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


