காடு மேடுகளை தங்களின் உழைப்பால் வளமாக்கியவர்கள் தமிழர்கள் என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை கர்நாடக தமிழ்க் குடும்பம் கூட்டமைப்பு சார்பில் பொங்கல், திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் செந்தில், பாடலாசிரியர்கள் ந.முத்துகுமார், பா.விஜய், நகைச்சுவை நடிகர்கள் சிசர் மனோகர், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த பாரதிராஜா பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: சர்வதேச அளவில் தமிழர்கள் வாழ்ந்த, வாழும் இடத்துக்கும் விசுவாசமாய் உள்ளனர். தாங்கள் வாழும் மண்ணை ரத்தம் சிந்தி வளப்படுத்துகின்றனர். காடு, மேடுகளை தங்களின் கடும் உழைப்பால் சோலை வனமாக வளப்படுத்தியவர்கள் தமிழர்கள். தமிழனுக்குப் பரந்த மனப்பான்மை உண்டு. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதற்கு ஏற்ப எல்லா மொழியைச் சேர்ந்த மக்களையும் சொந்தமாகக் கருதி, நேசிப்பவன் தமிழன்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் திருவள்ளுவருக்கு விழா எடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழர்கள் மொழி, இனப் பற்றை மறக்காமல் தாய் மண்ணிற்கும், வாழும் மண்ணிற்கும் பாலமாகத் திகழ்கின்றனர் என்றார்.
கர்நாடக தமிழ்க் குடும்பம் கூட்டமைப்பின் தலைவர் பி.வி.செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


