கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – தேர்தல் ஆணையர் திடீர் பதவி விலகல்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென பதவி விலகியுள்ளார்.அவரது பதவிக்காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவர் பதவி விலகியது நாட்டை பரபரப்பாக்கியுள்ளது.

பதவி விலகல் கடிதம் கொடுத்தவுடனே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாகவும், இன்று (மார்ச் 9) முதலே அவர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே எஞ்சியிருக்கிறார். இந்தியத் தேர்தல் ஆணையர் குழுவில் மூவர் இடம்பெற வேண்டிய நிலையில், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அருண் கோயல்?

பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985 ஆம் ஆண்டு ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் ஒன்றிய அரசு செயலாளராகப் பணியாற்றியவர்.ஒன்றிய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து இவர் 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.இவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அவர் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 18 இல் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

ஒன்றிய அரசின் செயலாளராகப் பதவி வகித்த அருண் கோயல் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே, அதாவது நவம்பர் 19 ஆம் தேதியே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரும் தேர்தல் ஆணையர்களாக அனுப் சந்திர பாண்டேவும், அருண் கோயலும் பணியாற்றி வந்தனர்.

அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தன்னார்வ தொண்டு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஒன்றிய அரசின் செயலாளராகப் பதவி வகித்த அருண்கோயல் விருப்ப ஓய்வு பெற்ற அடுத்த நாளே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்தில் பல்வேறு சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று ஏடிஆர் மனுவில் கோரப்பட்டது.

அந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள்,இந்தக் கோப்பு 24 மணி நேரத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு அப்படியான அவசரம் ஏன்? மே 15-ஆம் தேதி தேர்தல் ஆணையர் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற உடனே மின்னல் வேகத்தில் அடுத்த ஆணையருக்கான கோப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி மின்னல் வேகத்தில் ஒப்புதல் அளிக்க அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், நாங்கள் அருண் கோயல் என்ற அதிகாரியின் திறனை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. மாறாக, எதன் அடிப்படையில் இந்த தேர்தல் ஆணையர் பதவிக்கான தேர்வு நடைபெற்றது என்பதையே கேட்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், தேர்தல் ஆணையராக தன்னை நியமிக்கும் திட்டம் குறித்து தனக்குத் தெரியாவிட்டால், அருண் கோயல் எப்படி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தார் என்பது மர்மமாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

தொடர்ந்து, இந்த வழக்கில் இருந்து நீதிபதி ஒருவர் விலகினார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்த நிலையில், தேர்தல் ஆணையராக அருண் கோயலை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி தள்ளுபடி செய்தது .

இந்நிலையில், பதவிக் காலம் நிறைவடையும் முன்பே தேர்தல் ஆணையர் அருண் கோயல் இன்று திடீரென பதவி விலகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரது பதவிக் காலம் 2027 வரை உள்ளது. இந்நிலையில், விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று திடீரென அருண் கோயல் பதவி விலகியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கெனவே ஒரு காலியிடம் இருந்த நிலையில், தற்போது அருண் கோயலும் பதவி விலகியிருப்பதால் தலைமை தேர்தல் ஆணையரான இராஜிவ் குமார் மட்டுமே தேர்தல் ஆணைய தலைமைப் பொறுப்பில் உள்ளார். தேர்தல் ஆணையத்தின் தலைமையில், ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரம் அவசரமாக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அருண் கோயலின் பதவி விலகலும் அவசரம் அவசரமாக ஏற்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது தேர்தல் ஆணையத்தை ஒன்றிய பாஜக அரசு எந்த அளவுக்குக் கைப்பாவையாகப் பயன்படுத்துகிறது என்பதையே தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது என்கிற விமர்சனங்கள் வருகின்றன.

Leave a Response