2024 நாடாளுமன்றத்தேர்தல் – திமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைக்கும் வேலைகளில் ஒன்றியம் முழுதும் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிவருகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி மட்டுமே உறுதியாகியிருக்கிறது.
அக்கூட்டணியில், திமுக,காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, கொமதேக, ஐயுஎம்எல், மநீம ஆகிய கட்சிகள் உள்ளன.

இக்கட்சிகளுடன் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது குறித்து நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து உடன்பாடு எட்டப்பட்டுள்ளன.

கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல்,இந்திய யூனியன் முஸ்லில் லீக் கட்சிக்கு இராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் முதலில் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்பின், திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி, விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உடன்படிக்கை கையெழுத்தானது.

இதன் தொடர்ச்சியாக, திமுக கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், காங்கிரசு உடனான தொகுதிப் பங்கீடும் நேற்று (மார்ச் 9) நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடுகள் நிறைவு பெற்றுள்ளன.

இதன்படி, திமுக – 21,காங்கிரசு – 9 + புதுச்சேரி,விசிக – 2 (சிதம்பரம், விழுப்புரம்),சிபிஐ – 2,சிபிஎம் – 2,
மதிமுக -1,இயூமுலீ – 1 (இராமநாதபுரம்), கொமதேக – 1 (நாமக்கல்) ஆகிய எண்ணிக்கையில் போட்டியிடவுள்ளன.

2019 ஆம் ஆண்டு, திமுக 20 தொகுதிகளிலும், காங்கிரசு 10, மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., விசிக தலா2,மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், ஐஜேக தலா 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

இம்முறை திமுக கூட்டணியிலிருந்து ஐஜேகே வெளியேறியிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் உள்ளே வந்திருக்கிறது.

Leave a Response