உலகத் தாய்மொழி நாள் – அதேநாளில் தமிழ்நாட்டில் நடந்த முக்கிய நிகழ்வு

உலகத் தாய்மொழி நாள் (International Mother Language Day) இன்று.

2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலகம் முழுவதும் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை அரச மொழியாக மாற்றக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்த நாள் உலகளாவிய ரீதியில் மொழி தொடர்பாக நினைவுகூறப்படுகின்றது.

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் 1999 ஆம் ஆண்டு இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது.

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது.

இந்த உலகத்தாய்மொழி நாளில் தமிழர்களாகிய நாம் எமது தாய்மொழியையும் நம் தாய்மொழிக் கடமைகளையும் நிறைவாகச் செய்ய உறுதி கொள்ளவேண்டும்.

அதோடு, இந்நாளை நம்முடைய வரலாற்றோடும் தொடர்பு படுத்தும் முக்கிய நிகழ்வு இந்நாளில் நடந்துள்ளது.

அது என்ன தெரியுமா?

கட்டாய இந்தித் திணிப்பு ஒழிக்கப்பட்ட நாள் 1940 பிப்பிரவரி 21.

உலகத் தாய்மொழி நாளோடு இந்த வரலாறு இணைத்துப் பேசப்பட வேண்டும்.

தந்தை பெரியார் வழிநடத்திய 1938 முதலாவது மொழிப்போரில்,அவரால் முன்னிறுத்தப்பட்டோர் மறைமலையடிகளாரும் நாவலர் ச.சோ.பாரதியாரும் !

ஒன்றரையாண்டுக் காலம் தொடர்ந்து நடந்த போராட்டம் அது! தொடர்ந்து போராடிச் சிறை நிரப்பும் தொண்டர் படை பெரியாரிடம் இருந்தது.

போராட்டம் வெற்றி பெற்றதால் காப்பாற்றப்பட்டது தமிழ் மட்டுமல்ல. இந்தி அல்லாத மாநில மொழிகள் அனைத்தும்!

உயர்நிலைப்பள்ளி வகுப்புகள் முழுமையும்,தமிழ்பயிற்றுமொழியாக்கப்பட்டது அந்தப் போராட்டத்தால்தான்!

சாதி,மதம் கடந்து தமிழர் என்ற உணர்வோடு தமிழினம் போராடிய
முதல் போராட்டம் அதுதான்!

கட்டாய இந்தி ஒழிக்கப்பட்ட பிப்ரவரி 21ஆம் நாள்,உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுவது தமிழருக்குப் பெருமை! பெருமைக்குரிய வரலாறு பேசப்பட வேண்டும் தமிழர்களால்!

கடந்தகால வரலாற்றை மறந்தோருக்கு நிகழ்காலம் இல்லை !
நிகழ்காலத்தை உணர்ந்து செயல்படாதோருக்கு எதிர்காலம் இல்லை!

Leave a Response