மதிமுக எதிர்பார்க்கும் தொகுதிகள் – துரைவைகோ வெளிப்படை

நெல்லையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்….

தமிழ்நாட்டில் சமூக நீதி, சமத்துவத்தை நிலை நாட்ட மாபெரும் தமிழ்க்கனவு என்ற சிறந்த நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார்.

ஒன்றிய அரசு மழை, வெள்ளப் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்காமல் இருந்து வருகிறது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை.ஆனால் தமிழ்நாடு அரசு தன் பங்காக பணிகளை விரைந்து முடிக்க ரூ.12 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.பணிகளும் விரைந்து நடந்து வருகின்றன.

மதம்,சாதியை வைத்தும்,இராமர் கோயிலை வைத்தும் பாஜக செய்யும் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இது வெளிப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க ஒரு போலியான கருத்தை மக்கள் மத்தியில் பதிவு செய்கிறது.400 இடங்களை வெல்வோம் என்று கூறுவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வருகிற தேர்தலில்,விருதுநகர், திருச்சி, சென்னை, ஈரோடு போன்ற தொகுதிகளை மதிமுக நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் தொகுதி எண்ணிக்கை முதலில் முடிவாகட்டும்.அதன்பின்னர் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடலாம் என தலைமை முடிவு செய்யும்.

ஒவ்வொரு கட்சிக்கும் தனிச் சின்னம் உள்ளது.அந்தச் சின்னத்தில் போட்டியிட விரும்புவது வழக்கம்தான். கடந்த காலத்தில் பம்பரம் சின்னத்தை இழந்து விட்டோம்.தற்போது பம்பரம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்து கூட்டணித் தலைமையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response