செந்தில்பாலாஜி பதவி விலகியது ஏன்?

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் 2023 ஜூன் 13 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர், மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

தற்போது அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.இரவி பிறப்பித்த உத்தரவை சில மணி நேரங்களில் அவரே நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

அண்மையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 19 ஆவது முறையாக நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்த நிலையில் நேற்று தனது பதவி விலகுவதாகக் கூறி முதலமைச்சருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.அவர் அனுப்பிய பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவிவிலகலை ஆளுநர் ஏற்ற பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

செந்தில்பாலாஜி பதவி விலகியது ஏன்?

எட்டு மாதங்களாக வழக்கை நடத்தாமல் செந்தில்பாலாஜியைத் தொடர்ந்து சிறையிலேயே வைத்திருக்கிறார்கள்.

பாராளுமன்றத் தேர்தலின் போது அவர் வெளியே இருந்தால் பல தொகுதிகளில் எதிர்க்கட்சியினரின் கட்டுத் தொகை கூடக் கிடைக்காமல் செய்துவிடுவார் என்கிற அச்சம் உள்ளது, அதனால்தான் அவர் மீதான வழக்கை விசாரிக்காமலே சிறையில் வைத்திருக்கிறார்கள்.

நிச்சயம் தேர்தல் வரை அவரைச் சிறையிலேயே வைத்திருப்பது உறுதி என்பதும் தேர்தல் பரப்புரையில், சிறையில் இருப்பவரை அமைச்சராக வைத்திருக்கிறார்கள் என்று பரப்புரை செய்வார்கள் என்பதும் தெரியவந்ததால் அவற்றை முறியடிக்க அவரே பதவி விலகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

செந்தில்பாலாஜியை முன்வைத்து, மாநில அமைச்சரைப் பதவி நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்குத்தான் உண்டு என்பதை நிறுவினார் தமிழ்நாடு முதலமைச்சர். இப்போது அவரையே பதவி விலக வைத்ததன் மூலம் அந்த உரிமையைத் தக்க வைத்த அதேநேரம் இதை வைத்துச் செய்யப்படவிருக்கும் விசமப் பரப்புரைகளுக்கு முடிவும் கட்டியிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

Leave a Response