இவ்வாண்டு ஏப்ரல் மாதவாக்கில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
தற்போது ஆளும் பாஜகவோ, எல்லா மாநிலங்களிலும் அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை வலுவிலக்கச் செய்யும் வேலைகளில் இஅங்கிவருகிறதெனக் குற்றம் சாட்டப்படுகிறது.
சில நாட்களுக்கு முன், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமையேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரைத் தன்வயப்படுத்தியது பாஜக. தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் இந்நிகழ்வு நடந்ததால் தேர்தலில் அது நிச்சயம் எதிரொலிக்கும் அதன் விளைவாக பீகாரின் நாற்பது தொகுதிகளை பாஜக மறந்துவிட வேண்டியதுதான் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகள் காரணமாக ஒன்றியத்தை ஆளும் பாஜக மீது அம்மாநில மக்கள் கடுங்கோபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கோபம் எதிரொலிக்கும் என்பதால் அம்மாநிலத்திலும் பாஜக ஓரிடத்தில் கூட வெல்லமுடியாது என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜகவோ அதன் கூட்டணிக்கட்சிகளோ பெரிதாக வெல்லவியலாது எனும் நிலை இருக்கிறது.
இந்நிலையில் வடமாநிலங்களிலும் இப்போது நாற்பத்தியாறு தொகுதிகளை முழுமையாக பாஜக இழந்திருப்பதாகவும் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்கிற நோக்கில் பாஜக செய்யும் வேலைகள் அதற்கு எதிராகவே போய்முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.