ஓட்டுப்பதிவு எந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் நுழைந்த பாஜக – பகிரங்க குற்றச்சாட்டு

வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கும் ‘பெல்’ நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவிகளில் நியமிக்கப்பட்ட பாஜக நிர்வாகிகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் ஒன்றிய நிதி மற்றும் எரிசக்தித் துறைச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டுவருகின்றன.அவற்றை ஆளும் பாஜக கண்டுகொள்வதேயில்லை.

இந்நிலையில், முன்னாள் ஒன்றிய நிதி மற்றும் எரிசக்தித் துறைச் செயலாளர் டாக்டர் இ.ஏ.எஸ்.சர்மா தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்….

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான ‘பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவிகளில் பாஜக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ‘பெல்’ நிறுவன இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பணித் தகவல்கள் குறித்த விபரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும்.

‘பெல்’ குழுவில் நான்கு பாஜக நிர்வாகிகள் ‘சுயாதீன’ இயக்குநர்களாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ‘பெல்’ நிறுவனத்தின் உள்விவகாரங்களில்,அவர்கள் தலையிட வாய்ப்புள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைய சில்லுகளில் பதிக்கப்பட்ட இரகசிய மூலக் குறியீட்டை உருவாக்குவது உள்ளிட்ட விசயங்களை மேற்பார்வையிடும் தேர்தல் ஆணைய செயல்பாடுகளில் தலையிட, ஒரு அரசியல் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டும் அது புறக்கணிக்கப்பட்டது.

ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதிலோ, தேர்தல் வெளிப்படைத்தன்மை குறித்தோ எந்த அக்கறையும் இல்லை என்பதையே இந்த விசயங்கள் காட்டுகின்றன. ‘பெல்’ இயக்குநர்கள் குழுவில் ராஜ்கோட் பாஜக மாவட்டத் தலைவர் மன்சுக்பாய் ஷாம்ஜிபாய் கச்சாரியா மற்றும் இரு பாஜக ஆதரவாளர்கள் பதவியில் உள்ளனர்.

எனவே தலைமை தேர்தல் ஆணையம், தனது தேர்தல் செயல்முறைகளைப் பேணுவதில் தீவிரமாகச் செயல்படுவதாக இருந்தால், புதியதாக நியமிக்கப்பட்ட அரசியல் சார்புடைய நபர்களைத் திரும்பப் பெறுமாறு சம்பந்தப்பட்ட ‘பெல்’ அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையெனில், அது ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கு பாதகமான சூழலை உருவாக்கும்

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response