தமிழகம் கொடுத்தது 5.16 இலட்சம் கோடி பெற்றது 2.08 இலட்சம் கோடி – ஒன்றிய அரசு வஞ்சனை

தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது….

மிக்ஜாம் புயல், பெருமழைக்குப் பின்னர் சென்னை மாநகரம் தற்போது மீண்டெழுந்து உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முதலமைச்சர் மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் அவரது ஈடுபாட்டின் காரணமாக சென்னைக்கு வர இருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. புயலுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக இன்றைக்கு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பி இருக்கிறார்கள்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே வரவேற்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழ்நாட்டில் இருக்கும் சில எதிர்க்கட்சிகள் அரசின் மீது விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்த போது, தமிழ்நாடு கொரோனாவின் கொடும்பிடியில் சிக்கி இருந்தது. அன்றைக்கு வடமாநிலங்களில் கங்கையில் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன.

டெல்லி மாநகரத்தில் உள்ள மருத்துவமனைகளில் எல்லாம் ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்தார்கள். அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் முதல்வரின் சீரான தலைமையில் அவரது முழு ஈடுபாட்டோடு கொரோனா பேரிடர் நடவடிக்கைகளை திமுக அரசு மிகச் சிறப்பாக மேற்கொண்டது. முதலமைச்சரே கவச உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் சென்று நோயாளிகளைச் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். டெல்லியில் உட்கார்ந்துகொண்டு மணியை ஆட்டுங்கள், கையைத் தட்டுங்கள் என்று சொல்லவில்லை. களத்தில் இறங்கி முதலமைச்சர் பணியாற்றினார் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஒரு இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக அரசு அன்றைக்குச் செயல்பட்டது.

கொரோனா பேரிடரை எதிர்கொண்டது போன்றுதான் இந்தப் பேரிடரிலும் திமுக அரசு முன்னணியில் இருந்து போராடியது. தலைவன் என்பவன் முன்னணியில் இருந்து போராடுபவனாக இருக்க வேண்டும். முதலமைச்சர் கொரோனா பேரிடரில் எப்படி முன்னணியில் இருந்தாரோ, அதேபோன்று இந்தப் பேரிடரிலும் முதலமைச்சர் முழுமையாகக் களத்தில் இருந்தார். ‘எங்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள். எங்களுக்கு ஓட்டுப் போடாதவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என்று நிச்சயம் வருத்தப்படும் வகையில் எங்களுடைய பணிகள் இருக்கும்’ என்று முதலமைச்சர் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். இந்த வெள்ளத்திலும் அரசியலை பார்க்காமல் அனைவருக்கும் திமுக அரசு ஒட்டுமொத்தமாகக் களம் இறங்கி இந்தப் பேரிடரைச் சமாளித்து இருக்கிறது.

சென்னை மாநகரைப் பொறுத்தவரையில் 2015 ஆம் ஆண்டு வந்த வெள்ளப்பெருக்கை அன்றைய ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு மோசமாகக் கையாண்டார்கள் என்பதையும், தற்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இன்றைக்கு உயிரிழப்புகள், சேதாரம் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை ஆங்கிலப் பத்திரிகையின் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்ற ஆட்சியில் ஜெயலலிதா படத்தையோ, எடப்பாடி பழனிசாமி படத்தையோ போட்டு நிவாரணப் பொருட்கள் வழங்கியது போன்று இந்த ஆட்சியில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டக்கூடிய வேலைகளைச் செய்யாமல் நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்தபோது அதை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். வெள்ளச் சேதத்தைப் பார்த்து அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழ்நாட்டுக்குச் செல்லாதீர்கள் என்று சொல்லக்கூடிய வகையில் நிலைமை மோசமாக இருந்தது. அப்போது நிவாரணப் பணிகளில் ஒருங்கிணைப்பு இல்லை என்று ஐகோர்ட் சுட்டிக்காட்டியது. 2015 ஆம் ஆண்டு மழை நிவாரணப் பணிகளுக்கு ரூ.10,250 கோடி நிதி வேண்டும் என்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஒன்றிய அரசிடம் கேட்டார். அவர் அன்றைக்கு மக்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம்.

இன்றைக்கு ரூ.5,200 கோடிதான் கேட்டிருக்கிறோம். ஆனால் ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்குகிறோம். இந்த நிவாரணத்தை ஒன்றிய அரசுதான் வழங்குகிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லி இருக்கிறார். வெள்ளம் வந்தபோது கமலாலயத்தின் கதவுகளைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தவர்கள் எல்லாம், வெள்ளம் வடிந்த பின்னர் வெளியே வந்து அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு பேட்டி அளித்துவிட்டு சேலத்துக்குச் சென்றுவிட்டார். இன்றைக்கு இந்த நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சொல்கிறார். ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஒருவர் சொல்கிறார். ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மற்றொருவர் சொல்கிறார்.

நான் அண்ணாமலையிடம் கேட்டுக்கொள்வது, நீங்கள் ஒன்றிய அரசிடம் பேசி தமிழ்நாடு அரசு கேட்டுள்ள நிதியைப் பெற்று தர வேண்டும். ஏற்கனவே ஜிஎஸ்டி நிலுவைத்தொகைக்காகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

2014-15 முதல் 2021-22 வரையில் ஒன்றிய அரசின் நேரடி வரிப் பகிர்வாக நாம் கொடுத்திருப்பது ரூ.5.16 இலட்சம் கோடி. இதே காலக்கட்டத்தில் வரிப் பகிர்வாக ஒன்றிய அரசிடம் நாம் பெற்றிருப்பது ரூ.2.08 இலட்சம் கோடிதான். தற்போது தமிழ்நாடு அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசிடம் பெற்றுத் தரும் வேலையை அண்ணாமலை முதலில் செய்துவிட்டு, அதற்குப் பின்னர் அவருடைய விமர்சனங்களை முன் வைக்கலாம்.

சென்னையைப் பொறுத்தவரையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும். இதற்கு ‘டோக்கன்’ வழங்கும் பணி 16 ஆம் தேதி தொடங்கும். அடுத்த 10 நாட்களில் இந்தப் பணி நிறைவடையும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட வட்டங்களில் உள்ளவர்களுக்கு இந்த நிவாரணத்தொகை கிடைக்கும். நிவாரணத் தொகை வழங்குவதற்கான ஆதாரமாக ரேஷன் அட்டை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் பாதிக்கப்படுபவர்கள் அரசிடம் முறையீடு செய்யலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தியபோது புகார்கள் வந்தன. ஏதேனும் கடன் இருந்தால் வங்கிகள் அந்தத் தொகையைப் பிடித்தம் செய்து கொள்கிறார்கள். தற்போது கஷ்டத்தில் இருக்கும் மக்கள் கையில் பணம் நேரடியாகப் போய்ச் சேர வேண்டும். வங்கிகளில் பணம் செலுத்தி அவர்கள் பிடித்தம் செய்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடையாது என்பதால்தான் வங்கிக் கணக்கில் செலுத்தாமல் நேரடியாகக் கொடுக்கிறோம்.

2015 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள், பலியானவர்களின் எண்ணிக்கை 289. 23 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அந்தச் சமயத்தில் 10 நாட்கள் கழித்தும் மின்சாரம் வராத நிலை இருந்தது. அரசு மற்றும் தனியார் சொத்துகள் பெருமளவில் சேதமடைந்தன. தற்போது அதுபோன்ற சூழ்நிலை ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்த் திறப்பில் கவனம் செலுத்தினோம். இதன்மூலம் உயிர்ச் சேதங்களைத் தவிர்த்துள்ளோம்.

2011 ஆம் ஆண்டு தானே புயல் கடலூர் மாவட்டத்தைச் சூறையாடியது. அந்த நேரத்தில் அதிமுகவின் பொதுக்குழுவை நடத்திக் கொண்டிருந்தார்கள். 2017 ஆம் ஆண்டு வந்த ஒக்கி புயலில் கன்னியாகுமரி நிலை குலைந்தது.அப்போது அதிமுகவினர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்தார்கள்.

2018 ஆம் ஆண்டு கஜா புயல் டெல்டா மாவட்டத்தைத் தாக்கியது. அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார்.

இன்றைக்குல் களத்தில் நின்று பணியாற்றி உயிர்ச் சேதங்களை திமுக அரசு தவிர்த்து இருக்கிறது. ஆனால் அரசியல் உள்நோக்கத்துக்காக எதிர்க்கட்சியினர் அவதூறு பிரசாரத்தை செய்கிறார்கள். மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு நடைபெற்றது என்பதை அமைச்சர் கே.என்.நேரு விரிவாகச் சொல்லி விட்டார். நாங்கள் எதையும் மூடி மறைக்கவில்லை. எங்களுடைய பணி வெளிப்படையானது. எனவே இதில் வெள்ளை அறிக்கை கேட்பது என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்

Leave a Response