மிக்ஜாம் புயல் பாதிப்பு விவரங்கள்

வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். பால், உணவுபொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக பெட்ரால் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மின்தடையை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மின் விநியோகமும் தகவல் தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டதால் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் பங்க்குகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. இதனால் அங்கு பெட்ரோல், டீசல்விநியோகம் நிறுத்தப்பட்டு பங்க்மூடப்பட்டது. இருக்கும் பெட்ரோல் பங்க்குகளிலும் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, வெள்ளம் காரணமாக சில இடங்களுக்கு லாரிகளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு தினங்களில் நிலைமை சீராகி விடும் என்றனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. பல வீடுகளில் நிலத்தடி நீர்த்தேக்க தொட்டிகளிலும் கழிவுநீர் கலப்பால் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை. கேன் குடிநீர் விநியோகமும் தடைபட்டுள்ளது.

புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்பல இடங்களில் இன்னும் மின்விநியோகம் தொடங்கப்படவில்லை. இதை கண்டித்து புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியம்,மகாகவி பாரதி நகர் பகுதிகளில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுட்டனர். இதற்கிடையே, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘தண்ணீர்குறையக்குறைய மின்இணைப்பு வழங்கப்படும். 96 சதவீதம் சகஜ நிலைக்கு வந்துள்ளது’’ என்றார்.

இந்நிலையில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக ரூ.5,060 கோடியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் எனக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்தை, பிரதமர் நரேந்திர மோடியிடம் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழங்குகிறார்.

அக்கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது….

தமிழ்நாட்டில் டிசம்பர் 2, 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தாக்கிய ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவைச் சந்தித்தன. இதன் காரணமாக, இந்த 4 மாவட்டங்களில், குறிப்பாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொதுக் கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.

மேலும், இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டுக்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும். சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மழை பாதிப்புகள் குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்திலும் பேசியுள்ளார்.

இந்நிலையில், ஒன்றிய அரசு சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட இன்று சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் அவர், சென்னை விமான நிலையத்துக்கு பகல் 12.15 மணிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுகிறார். அவருடன் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம்தென்னரசு, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் பயணிக்கின்றனர்.

Leave a Response