சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட நேற்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் சென்னை வந்தார்.
பாதிப்புகளைப் பார்வையிட்ட பிறகு, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது…..
புயல், வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த ஒன்றிய அமைச்சருக்கு தமிழ்நாடு மக்கள் சார்பிலும், அரசு சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையின் வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பெய்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு, சென்னை நகரமும், மக்களும் இயல்புநிலைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளன.
சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் போன்ற பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீரமைக்கவும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.5060 கோடி நிதி வழங்கும்படி பிரதமருக்கு ஏற்கெனவே நான் கோரிக்கை விடுத்திருந்தேன். நமது கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனுவை ஒன்றிய அமைச்சரிடம் அளித்துள்ளேன். இழப்பீடுகளை மதிப்பீடு செய்ய ஒன்றிய அரசின் குழு ஒன்று விரைவில் தமிழ்நாடு வர உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நிதியுதவியை ஒன்றிய அரசு விரைவில் வழங்கும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். நிவாரணப் பணிகளை முழுவீச்சில் தொடர்ந்து மேற்கொண்டு, அனைத்துப் பகுதிகளையும் இயல்பு நிலைக்கு விரைவில் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
பின்னர் ஒன்றிய அமைச்சர் இராஜ்நாத்சிங் கூறியதாவது….
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளால் பிரதமர் மோடி மிகுந்த துயரமடைந்துள்ளார். இந்தக் குழப்பமான சூழலை பிரதமர் மோடி கண்காணித்து வருவதுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனும் பேசியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு உதவ உத்தரவிட்டுள்ளார். இங்குள்ள சூழல் குறித்து தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் எனக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்புப் படை, வானிலை ஆராய்ச்சி மையம், துணை இராணுவம் உள்ளிட்ட அனைத்து மத்திய அரசின் அமைப்புகள், வெள்ளத்தால் ஏற்பட்ட துயரைத் தணிக்கும் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன. பாதிப்பு நிலவரத்தை அறிய, நான் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தேன்.
அதன்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினேன். தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினேன். இங்குள்ள சூழலை மாற்ற மத்திய அரசு தன்னால் இயன்ற முயற்சிகளை செய்யும். தேவைப்படும் பட்சத்தில் மேலும் விரிவுபடுத்துவோம். தமிழ்நாடு நலனுக்காக மத்திய அரசு தன்னை பணித்துள்ளது. மக்களின் பாதிப்பை நீக்க மத்திய அரசு அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் இதை அறிய முடியும்.
மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசு, தமிழகத்துக்கு ரூ.450 கோடியை விடுவிக்க உள்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, முதல் தவணையாக ரூ.450 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக சென்னையில் வெள்ள பாதிப்புகள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, தேசியப் பேரிடர் தணிப்பு நிதியின் கீழ், சென்னை வடிகால் திட்டத்துக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைக்கு ரூ.561.29 கோடி மதிப்பிலான வெள்ளத் தணிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், ரூ.500 கோடி மத்திய நிதியும் அடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு கேட்டது 5060 கோடி ஒன்றிய கொடுத்திருப்பது 450 கோடி. இதனால் ஒன்றிய அரசு மீது சென்னை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.