தெலங்கானா,சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம்,இராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நவம்பர் மாதத்தில் நடந்தன.
5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் டிசம்பர் 3 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அவற்றில் மிசோரம் மாநில வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.மற்ற நான்கு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.இன்னும் முழுமையாக முடிவுகள் வெளியாகவில்லை.
மாலை ஆறு மணிவரையிலான முன்னணி நிலவரங்களின்படி,
நான்கு மாநிலங்களில் மூன்றில் பாஜகவும் ஒரு மாநிலத்தில் காங்கிரசுக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்கவுள்ளன.
அவற்றின் விவரங்கள்…
மத்தியபிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள். இவற்றில் பாஜக 164 இடங்களிலும் காங்கிரசு 65 இடங்களிலும் மற்றவை ஓரிடத்திலும் முன்னணியில் உள்ளன.
இராஜஸ்தானில் மொத்தம் 200 இடங்களில் ஓரிடத்தில் தேர்தல் நடக்கவில்லை. மீதமுள்ள 199 இடங்களில், பாஜக 115 இடங்களிலும் காங்கிரசு 68 இடங்களிலும் மற்றவை 16 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
சத்தீஸ்கரில் மொத்தம் 90 இடங்கள். அவற்றில் பாஜக 55 இடங்களிலும் காங்கிரசு 35 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 இடங்கள். அவற்றில் காங்கிரசு 64 இடங்களிலும் தற்போது ஆளும் பிஆர்எஸ் கட்சி 39 இடங்களிலும் பாஜக 9 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
இந்த முடிவுகளில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாது என்பதால் மத்தியபிரதேசம்,இராஜஸ்தான்,சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்கவிருக்கிறது. இவற்றில் இராஜஸ்தான்,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரசு ஆட்சி நடந்துவந்தது. அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக.
தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர்ராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியிலிருந்தது. அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது காங்கிரசு.