5 மாநில சட்டமன்றத் தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – காங்கிரசுக்கு நல்வாய்ப்பு

தெலங்கானா,சத்தீஸ்கர்,மத்தியப்பிரதேசம்,இராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் அடுத்த மாதம் நடைபெற உள்ளன.

இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தேர்தல் அட்டவணையை வெளியிடுவதற்கான செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் இன்று நண்பகல் நடைபெற்றது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தலைமையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு….

தெலங்கானா –

தெலங்கானாவில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 3 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 10. வேட்புமனுக்கள் நவம்பர் 13 ஆம் தேதி பரிசீலிக்கப்படுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 15. தேர்தல் நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி.

தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் உள்ளது. 2014 ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அம்மாநிலத்தின் முதல்வராக கே.சந்திர சேகர ராவ் உள்ளார். இவரது 10 ஆண்டு கால ஆட்சி மீதான மக்களின் தீர்ப்பாக வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் கருதப்படுகிறது. தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு காங்கிரசுக் கட்சி கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், இம்மாநிலத்தில் பாஜகவும் தற்போது வலுவடைந்துள்ளது. எனவே, வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் மும்முனைப் போட்டியாக இருக்கும்.

சத்தீஸ்கர் –

சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 7 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 17 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

இங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரசை வீழ்த்தத் துடிக்கிறது பாஜக.

மத்தியப் பிரதேசம் –

மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 21 ஆம் தேதி தொடங்கி, 30 ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் வரும் 31 ஆம் தேதி பரிசீலிக்கப்பட உள்ளன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் நவம்பர் 2. பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படும்.

மத்தியப் பிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சியில் உள்ளது.இங்கு ஆட்சியைப் பிடிக்க காங்கிரசு முனைப்பாக உள்ளது.

இராஜஸ்தான் –

இராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் நவம்பர் 6. வேட்புமனுக்கள் நவம்பர் 7 ஆம் தேதி பரிசீலிக்கப்பட உள்ளன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 9. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

இங்கு ஆட்சியில் இருக்கும் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் நேரடிப்போட்டி உள்ளது.

மிசோரம் –

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் நவம்பர் 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் வரும் 13 ஆம் தேதி தொடங்கி, 20 ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் வரும் 21 ஆம் தேதி பரிசீலிக்கப்படுகின்றன. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 23.

மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். இங்கே, மிசோ தேசிய முன்னணிக்கும் காங்கிரசுக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி மட்டுமே உள்ளது.

Leave a Response