உபி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக தோல்வி – ப.சிதம்பரம் கருத்து

உத்தரபிரதேசம்,மேற்குவங்கம்,கேரளா,ஜார்கண்ட்,திரிபுரா,உத்தரகாண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

கேரளாவில் புதுப்பள்ளி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் 37 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கோசி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் வெற்றி பெற்றார்.

இதேபோல் காங்கிரசும், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசூம் வெற்றி பெற்றுள்ளது. ஜார்கண்ட்டில் ஆளும் ஜே.எம்.எம். வெற்றி பெற்றுள்ளது.

திரிபுராவின் 2 தொகுதிகளிலும், உத்தரகாண்டிலும் பாஜக வெற்றியைப் பதித்துள்ளது.

இது குறித்து டிவிட்டர் தளத்தில் நேற்றிரவு கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,

ஜி20 உச்சி மாநாட்டிற்கு தலைவர்களின் வருகை அல்ல இன்றைய செய்தி, இன்று அறிவிக்கப்பட்ட 7 இடைத்தேர்தல்களின் முடிவுதான் முக்கிய செய்தி.

இந்தியா கூட்டணி 4:3 என்ற கணக்கில் பாஜகவை வீழ்த்தியுள்ளது. திரிபுராவில் 2 இடங்களிலும், உத்தராகண்டில் ஒரு தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

கேரளா, ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. இதில் உ.பி.,யில் பாஜக அதீதப் பெரும்பான்மையுடன் ஆளும் கட்சியாக உள்ளது. பாஜகவும் அதன் பணபலமும் தோற்கடிக்க முடியாதவை அல்ல. பாஜக-வின் கோட்டையில் கூட வீழ்த்த முடியும் என்பதை ‘இந்தியா’ கூட்டணி நிரூபித்துள்ளது

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response