எவ்வளவு திமிர்? எவ்வளவு கொழுப்பு? – ஓங்கி அடித்த உதயநிதி

நீட் தேர்வை இரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த போராட்டத்தை திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பேசியது….

மாணவர் ஃபயாஸ் என்னை எதிர்த்துக் கேள்வி கேட்டார். அவரை அழைத்துவந்து இந்த மேடையில் பேச வைத்திருக்கிறேன். அந்தத் தைரியம் எனக்கு இருக்கிறது.

நீட் தேர்வால் 21 உயிர்களை நாம் பலி கொடுத்து இருக்கிறோம். இது தற்கொலை கிடையாது. இது கொலை. இந்தக் கொலைகளைச் செய்தது ஒன்றிய பாஜக அரசு. அந்தக் கொலைகளுக்குத் துணை நின்றது அதிமுக. ஆளுநர் ஆர்.என். இரவிக்கு எவ்வளவு திமிரு, எவ்வளவு கொழுப்பு. ஒரு கூட்டம் நடத்துகிறார். அதில், நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை எல்லாம் அழைத்து ஒரு கூட்டம். கிட்டத்தட்ட நீட்டுக்கு ஒரு கோச்சிங் கிளாஸ் நடத்துகிற மாதிரி நடத்துகிறார்.

அதில் வெற்றி பெற்ற ஒரு மாணவனின் தந்தை எழுந்து,‘‘என்னிடம் வசதி இருந்ததால் என் மகனை கோச்சிங்கிற்கு அனுப்பினேன். ஆனால், என்னை மாதிரி எத்தனை பேரால் கோச்சிங் சென்டருக்கு அனுப்ப முடியும் என்று தைரியமாகப் பேசினார். அதற்கு, நீட்டை நீக்க முடியாது என்கிறார் ஆளுநர்.இதைக் கூற நீங்கள் யார். நீங்கள் ஒரு தபால்காரர் தான். முதல்மைச்சர் சொல்வதை ஒன்றிய அரசிடம் கொடுப்பது தான் உங்கள் வேலை. ஆளுநரிடம் கேள்வி கேட்ட அமாசியப்பனுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். அவரின் வேலைக்கு ஏதாவது பிரச்னை செய்தீர்கள் என்றால் நாங்கள் சும்மா விட மாட்டோம்.

தமிழ்நாட்டு மக்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது ஆளுநரே. வாக்குறுதியை நாங்கள் கொடுத்தாம்.அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முழு முயற்சியையும் தலைவர் எடுத்து வருகிறார்.ஆட்சி அமைத்து முதல்வராக பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், ஓய்வபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களை சந்தித்தனர். நீட் தேர்வினால், எவ்வளவு பாதிப்புகள் என்பது குறித்த அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீட்டுக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாவுக்கு அதிமுக உள்பட அனைவரும் ஆதரவு தெரிவித்து வாக்களித்தார்கள். வாக்களிக்காத அந்த 4 பேர் பாஜவினர். இப்போது அந்த சட்ட மசோதா ஜனாதிபதியிடம் இருக்கிறது. ஆனால், ஆளுநர் இங்கே இருந்து கொண்டு பேசிக் கொண்டு இருக்கிறார். சிலர் மருத்துவப் படிப்பு தவிர வேறு படிப்பு இல்லை என்று சொல்கிறார்கள். அதை சொல்ல நீங்கள் யார்?. நீட்டை ஒழிக்கிறோமோ? அன்றைக்குதான் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒரு விடியல். அதை திமுக கண்டிப்பாகச் செய்யும். இதுதான் ஆரம்பம்.

மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மாடு பிடிப்பதற்கே சண்டை போட்டோம். ஒரு மாணவர்கள் உயிருக்குச் சண்டை போட மாட்டோமா? மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கித் தருவார். அனிதா பொதுதேர்வில் எத்தனை மார்க்கு என்று தெரியுமா?. அவர்கள் தற்கொலை செய்தது எல்லாம் நீட் தேர்வால். உங்கள் வீட்டில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் இப்படி சொல்வீர்களா? உண்ணாவிரதப் போராட்டம் தேவையற்றது என்கிறார்கள். நான் சொல்றேன். தமிழ்நாட்டிற்கு பாஜக என்ற கட்சியே தேவையில்லாதது. இது தொடர்ந்து கொண்டே போனால் ஒன்றிய பாஜகவையும், அதிமுகவையும் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

அதிமுகவுக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். அதிமுக மாநாட்டில் ஒரு தீர்மானத்தைப் போடுங்கள். ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று. எடப்பாடி பழனிச்சாமியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கூட வர வேண்டாம். உங்கள் இளைஞர் அணிச் செயலாளரை அனுப்பி வையுங்கள். மாணவர் அணிச் செயலாளரை அனுப்பி வையுங்கள். நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து டெல்லிக்கு போவோம். டெல்லியில் பிரதமர் வீட்டு முன் உட்காருவோம். அப்படி நீட்டுக்கு விலக்கு கிடைத்தது என்றால் முழுப் பெருமையையும் நீங்கள் எடுத்து கொள்ளுங்கள். அதிமுகவால் தான் நீட் தேர்வு இரத்தானது என்று நான் ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் தயாரா?.

நீட் மசோதாவுக்கு நான் கையெழுத்துப் போட மாட்டேன் என்று ஆளுநர் கூறிக்கொண்டு இருக்கிறார். உண்மையாக நாம் கண்டனத்தைத் தெரிவித்து கொண்டிருக்கிறோம். இதுவரை ஆளுநருக்கு எதிராக அதிமுகவில் இருந்து யாராவது மூச்சாவது விட்டு இருக்கிறார்களா? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணி என்று அவர்கள் கட்சியில் உள்ளவர்கள் சொல்வார்கள். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு இருக்கும் நீங்கள் பித்தளை மனிதராவது இருக்க வேண்டாமா? ஒரு பிளாஸ்டிக் மனிதராகவாவது இருக்க வேண்டாமா?. மோடியும், அமித்ஷாவும் பிசைந்து வைத்திருக்கிற களிமண்ணாகத் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர்.

வருகிற தேர்தலில் பாஜகவை ஓட, ஓட விரட்டுங்கள். காங்கிரசு ஆட்சியை உட்கார வைத்தீர்கள் என்றால் நிச்சயம் நீட் தேர்வு இரத்தாகும். இராகுல் அந்த வாக்குறுதியைக் கொடுத்து இருக்கிறார். இந்தப் போராட்டம் இத்துடன் நிற்காது. தலைவரின் அனுமதியைப் பெற்று விரைவில் டெல்லியில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response