சேலம் மாநகர் மாவட்ட அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூட்டம் சேலத்தில் நடந்தது. கூட்டத்தில் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் பெங்களூரு புகழேந்தி கலந்து கொண்டார்.
அப்போது அவரும், கட்சியினரும் காதில் பூ வைத்தபடி வந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘என்னாடி முனியம்மா உன் காதுல பூவு, யாரு வச்ச பூவு இது பழனிச்சாமி வச்ச பூவு,’’ என்று எடப்பாடி பழனிச்சாமியை பாட்டுப் பாடி கேலி செய்தார்.
அதன்பின் இது குறித்து புகழேந்தி கூறுகையில்….
எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்தல் அணையம் அங்கீகரித்துள்ளதாக செய்தி வெளியானது. அதுபற்றி ஜெயசிம்மன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார்.
அதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், 2018 ஆம் ஆண்டு தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவு செய்யப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள், அப்படியே தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிமுக பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்வதைத் தெரியப்படுத்த பாட்டுப் பாடினேன்.
எடப்பாடி பழனிச்சாமி தன்னைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்து எடுத்துள்ளனர் என்று கடிதம் கொடுத்துள்ளார். இப்படி அவர் கொடுத்த கடிதத்தின் பேரில், அவரது பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவர் பதிவு செய்ததை ரெக்கார்டில் பதிவு செய்துள்ளனர். அவ்வளவு தான். அதிகாரப்பூர்வமாக பொதுச்செயலாளர் என கூறவில்லை. இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குத் தொடர உள்ளோம்.
இவ்வாறு பெங்களூரு புகழேந்தி கூறினார்.