
“தமிழ்த்தேசியம்” என்கிற புரட்சிகர அரசியலை, அரசியல் தளத்திலும், கருத்தியல் களத்திலும் முன்னெடுத்துச் செல்வதில் முதன்மைப் பங்காற்றி வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின் 75 அகவை நிறைவையொட்டி தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த “பெ.மணியரசன் – 75 பெருவிழா” திருச்சியில் 11.06.2023 அன்று நடைபெற்றது.
ஞாயிறு 2023 சூன் 11 – அன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை திருச்சி – திருவெறும்பூர் கூத்தப்பார் சாலையிலுள்ள தாஸ் திருமண மண்டபத்திலும், மாலை 6 மணி முதல் 9.30 மணி வரை திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் திறந்தவெளியிலும் இவ்விழா நடைபெற்றது.
புகைப்படக் கண்காட்சி
நிகழ்வின் தொடக்கமாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொடியை பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் ஏற்றி வைத்தார். இதனையடுத்து, மணியரசன் 75 ஆண்டு கால வாழ்வின் ஒளிப்படங்களைக் கொண்ட ஒளிப்படக் கண்காட்சி திறக்கப்பட்டது. பாவலர் கவிபாஸ்கர் அரங்கத்தை வடிவமைத்திருந்தார்.மணியரசனின் நீண்டகால நண்பரும், தோழருமான அ.மன்னர்மன்னன் இதனைத் திறந்து வைத்தார். வே.மதிவாணன் முன்னிலை வகித்தார்,
தொடக்க நிகழ்வு
இதனையடுத்து, மறைந்த இதழாளர் தி.மா.சரவணன் அரங்கத்தில் நிகழ்வுகள் தொடங்கின. தமழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பெருவிழாக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான வே.க.இலக்குவன் வரவேற்புரையாற்றினார்.
செம்மை வாழ்வியல் நடுவத்தின் தலைமைச் செயற்பாட்டாளரும், பெ.மணியரசன் மகனுமான ம.செந்தமிழன், தனது தந்தைக்கும் தனக்குமான உறவு குறித்து பெருவிழா திறப்புரையாற்றினார். இதனையடுத்து, ஓவியர் கு.புகழேந்தி வாழ்த்துரை வழங்கினார், பெண்ணாடம் – திருவள்ளுவர் கலைக்குழுவினரின் பறையாட்டம் அரங்கை அதிரவைத்தது. பாவலர் நா.இராசரகுநாதன் எழுதி, பொறியாளர் ச.முத்துக்குமாரசாமி இசையமைத்துப் பாடிய “நெருப்பாய் ஒருவர் பிறந்தாரே” பாடலுக்கு, இக்குழுவினர் நிகழ்த்தியப் பறையாட்டம் அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தது.
பாடல் வெளியீடு
தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாஸ்கர் எழுதி, திரை இசைப்பாடகர் முனைவர் சித்தன் செயமூர்த்தி இசையமைத்தப் பாடியுள்ள “பேராசான் பெ.ம.” பாடல் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. திரைப்பட இயக்குநர் சோழன் மு.களஞ்சியம் இதனை வெளியிட்டார். இயக்குநர் கிட்டு,கணேசமூர்த்தி (ஜோதி அச்சகம்) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பாடல் திரையில் ஒளிபரப்பப்பட்டு, பார்வையாளர்களின் பலத்த கையொலியைப் பெற்றது.
பேரியக்கக் குடும்பத்தினரின் பாராட்டரங்கம்
அரங்கின் முதல் அமர்வாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் பயணிக்கும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த செயல்பாட்டாளர்களின் குடும்பத்தினர் இவ்வரங்கில் பங்கேற்று, மணியரசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்தனர். இவ்வரங்கிற்கு, மகளிர் ஆயத்தின் துணைத் தலைவர் க.செம்மலர் தலைமை தாங்கினார். பெ.ம.வுடன் உலகத் தமிழ்க் கழகத்திலும், சி.பி.எம். கட்சியிலும் இணைந்து செயலாற்றிய மயிலாடுதுறை கு.பெரியசாமி முன்னிலை வகித்தார்,
மணியரசன் பெயரன் செ.கா.நிகரன், மதுரை அ.ஆனந்தன் – இளமதி மகன் இலக்கியன் ஆகியோர் தாத்தா பெ.ம. குறித்து சிற்றுரை நல்கினர். ஈரோடு தோழர்களின் பிள்ளைகள் ஜூலி சரவணன், கலைநிலா, கலைத்தீரன், தென்னரசி, செம்மொழிச் செம்மல், ஆகியோர் ஈரோடு சரவணன் எழுதிய பாடல்கள் பாடினர்.
நிறைவில், ’எனது பார்வையில் பெ.ம.” என்ற தலைப்பில், மணியரசன் துணைவியாரும், மகளிர் ஆயத்தின் மேனாள் தலைவருமான ம.இலட்சுமி அம்மாள் உரையாற்றினார்.
“எங்கிருந்து.. இங்கு?” – நூல் வெளியீடு
இதனையடுத்து, மணியரசன் தனது வாழ்வு குறித்து எழுதியுள்ள “எங்கிருந்து.. இங்கு? – தன் வரலாற்றுக் குறிப்பு” நூலின் முதல் பகுதியின் வெளியீடு நடைபெற்றது, அரங்கிற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழக உழவர் முன்னணித் துணைத் தலைவர் மு.தமிழ்மணி, தமிழக இளைஞர் முன்னணித் துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன்,புளியங்குடி க.பாண்டியன் (பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் நூலை வெளியிட்டு உரையாற்றினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, அறிவியலாளர் த.வே. நடராசன் (தாளாண்மை உழவர் இயக்கம்), பொறியாளர் துரை. இரவி (தமிழர் தொழில் பாதுகாப்புக் கூட்டமைப்பு), பொறியாளர் இரா.பே.இராசப்பா (முகில் பொறியியல் தொழிலகம்) ஆகியோர் நூலைப் பெற்றுக் கொண்டு, மணியரசன் போராட்டங்களையும், அறிவாற்றலையும் பாராட்டிப் பேசியதுடன், இன்றைய அரசியல் சந்திக்கும் சிக்கல்களையும் உரையாற்றினர்.
கலை நிகழ்ச்சிகள்
அடுத்த நிகழ்வாக, தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயல்பாட்டாளர் இரா.எல்லாளன் தலைமையிலான சிதம்பரம் – தமிழர் தற்காப்புப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, திருச்சி பொறியாளர் ச.முத்துக்குமாரசாமி இசையமைத்துப் பாடிய பாடலுக்கு குடந்தை த.தே.பே. சிறுவர் – சிறுமியர் சிறப்பாக நடனமாடினர். பாவலர் இலரா மோகன் எழுதி, இசையமைப்பாளர் இரா.நா.வசந்த் இசையமைத்த பாடல் அரங்கில் ஒலிபரப்பப்பட்டது.
பா வீச்சு
இதனையடுத்து, பாவலர்கள் பங்கேற்ற பா வீச்சு நடைபெற்றது. அரங்கிற்கு, பாவலர் கவிபாஸ்கர் தலைமை தாங்கினார், பாவலர்கள் முழுநிலவன், நா.இராசாரகுநாதன், மூ.த.கவித்துவன், ஏ.பிரகாசுபாரதி ஆகியோர், எழுச்சிமிக்கப் பாடல்களை உணர்வெழுச்சியோடு வழங்கி பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றனர்.
போராட்டக்காரர்களின் பாராட்டரங்கம்
இதனையடுத்து, பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர்களின் பாராட்டரங்கம், பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் இரா.சு.முனியாண்டி, புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி, பன்மைவெளி பொறுப்பாளர் வெற்றித்தமிழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
தமிழ்மொழிக் காப்புச் செயல்பாட்டாளர் புலவர் துரை.மதிவாணன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன், காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த.மணிமொழியன், மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் (நாம் தமிழர் கட்சி), மா.மணிமாறன் (தமிழக மாணவர் முன்னணி) ஆகியோர் இவ்வரங்கில் மணியரசன் உடனான போராட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினர்.
ஆவணப்படம் திரையிடல்
அடுத்த நிகழ்வாக, மணியரசன் போராட்ட வாழ்க்கை குறித்து க.அருணபாரதி எழுதி இயக்கியிருந்த “பன்முகப் போராளி பெ.மணியரசன்” ஆவணப்படம் திரையிடப்பட்டது. அரங்கிற்கு, பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.விடுதலைச்சுடர் தலைமையேற்றார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு வெ.இளங்கோவன், தமிழ்நாடு தனியார் தமிழ்வழிப் பள்ளிகள் சங்கத் தலைவர் அ.மு.முஸ்தபா கமால், துரை. இரமேசு (காவிரி உரிமை மீட்புக் குழு), கவிஞர் பெ. பூங்குன்றன் (தமிழ்க் கலை இலக்கியப் பேரவை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆவணப்படம் பெ.ம.வின் பன்முகத் திறன்களையும், பலமுனைப் போராட்டங்களையும் விளக்கியதோடு, அவரது அரசியல் படிநிலை வளர்ச்சி அனைவருக்கும் பாடம் என்பதை சிறப்பான காட்சிகள் வழியாக எடுத்துக்காட்டியது.
ஆவணப்படத்தில் சிறப்பாகப் பங்காற்றிய அருணபாரதி (எழுத்து – இயக்கம்), சிதம்பரம் ச. கவின் (படத்தொகுப்பு – ஒலிக்கோவை), நா. இராசாரகுநாதன் (பின்னணிக் குரல்), பொறியாளர் ச. முத்துக்குமாரசாமி (ஒலிப்பதிவு – முன்னோட்டப் பாடல் இசை), ஐ. அருண்குமார் (தலைப்பு வடிவமைப்பு) ஆகியோர்க்கு பொதுச்செயலாளர் கி.வெ. நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.
ஆவணப்படத் திரையிடலுடன் தாஸ் திருமண மண்டப நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின்னர், திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் மணியரசன் பிறந்தநாள் விழா திறந்தவெளிப் பொதுக்கூட்டம் ஜி.பி. இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்து போராட்டங்களில் முதன்மைப் பங்கு வகித்த மறைந்த ந.மதியழகன் அரங்கத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
கல்வெட்டுத் திறப்பு
திறந்தவெளி நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக, பேருந்து நிலையம் அருகில் மணியரசன் 75 ஆவது பிறந்தநாள் விழா நினைவுக் கல்வெட்டு திறக்கப்பட்டது. வே.பூ.இராமராசு, பேரியக்கக் கொடியை ஏற்றி வைக்க, பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி. தென்னவன் கல்வெட்டைத் திறந்து வைத்தார். கோவை செயலாளர் தெள்ளியன் முன்னிலை வகித்தார்.
மல்லர் கம்பம்
சிதம்பரம் தமிழர் தற்காப்புப் பள்ளி மாணவர்களின் மல்லர் கம்பம் நிகழ்வுடன் பொதுக்கூட்ட நிகழ்வுகள் தொடர்ந்தன. தமிழர்களின் வீர விளையாட்டான மல்லர் கம்பத்தை காண்போர் கூச்செறியும் வகையில் அரங்கேற்றிக் காட்டினர். மாணவர்களுக்கு, வீரத்தமிழர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் முனைவர் துரை.செந்தில்நாதன் சிறப்பு செய்தார்.
தடம் மாறாத் தமிழ்த்தேசியம் – நூலறிமுகம்
பொதுக்கூட்டத்தின் முதல் அமர்வாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வரலாற்றையும், போராட்டங்களையும் துல்லியமாக எடுத்துரைக்கும் வகையில் கி.வெங்கட்ராமன் எழுதியுள்ள “தடம் மாறாத் தமிழ்த்தேசியம்” நூலின் அறிமுகம் நடைபெற்றது. பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கதிர்நிலவன் தலைமை தாங்கி உரையாற்ற, திருக்குறள் போல இந்நூல் ஒவ்வொரு தமிழ்த்தேசியர்களின் வீட்டிலும் இடம்பெற வேண்டுமெனக் கூறி நா.வைகறை இந்நூலின் தேவை குறித்து உரையாற்றினார்.
தமிழ்த்தேசியம் இனி – கருத்தரங்கம்
இதனையடுத்து, “தமிழ்த்தேசியம் இனி” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு, பேரியக்கத் துணைத் தலைவர் க.முருகன் தலைமை தாங்கினார். பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் க.அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ.மாரிமுத்து ஆகியோர் தமிழர்களின் இறையாண்மை மீட்புக்கான போராட்டம் அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர வேண்டுமெனக் கூறி உரையாற்றினர்.
நிறைவரங்கம்
இதனையடுத்து, பெருவிழாவின் நிறைவரங்கம் நடைபெற்றது. நிறைவரங்கிற்கு, பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கி உரையாற்றினார். உணர்வுமிகுதியுடன் உரையாற்றிய கி.வெ. தனது வாழ்நாளின் மீதமுள்ள பகுதியை மணியரசன் அவர்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்துப் பேசினார். இந்திய ஆரியக் கட்டமைப்பின் இன அழிப்பை பலமுனைகளில் சந்திப்பதுதான் தமிழ்த்தேசியத்தின் அடுத்தகட்ட நகர்வு என விளக்கினார்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எவ்வகைத் தன்னலமும் இன்றி தொடர்ந்து போராடி வரும் மணியரசனை ஏணியாகப் பற்றிக் கொண்டு தமிழின இளையோர்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்கு வர வேண்டுமெனக் கூறி வாழ்த்துத் தெரிவித்துப் பேசினார். நிறைவாகப் பேசிய, பேரியக்கத் தலைவர் – பெருவிழா நாயகர் பெ.மணியரசன், கி.வெ. இல்லையெனில் நான் இல்லை, இருவரும் ஒன்றாக இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என நெகிழ்வுடன் ஏற்புரை வழங்கினார்.
நிகழ்வின் ஊடாக, தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினரும், தமிழ் வேத ஆகமப் பாடசாலையின் நிறுவனருமான சிம்மம் சத்தியபாமா அம்மையார் தலைமையிலான அடியார்கள் தாங்கள் பூசை செய்து எடுத்து வந்த, செங்கோலை மணியரசன் அவர்களிடம் வழங்கி வாழ்த்தினர்.
நிறைவில், பெருவிழாக் குழு சார்பில், மு.தியாகராசன் நன்றி கூற, விழா இனிதே நிறைவுற்றது.
சற்றொப்ப இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற பெருநிகழ்வாகப் பொதுக்கூட்ட நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது. பாவலர் நா. இராசாரகுநாதன், சி. இராகுல்பாபு, இலெ. இராமசாமி, தீந்தமிழன், செவ்வியன் ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.
நேரில் வாழ்த்து
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த தமிழின உணர்வாளர்களும், உழவர்களும், பொது மக்களும், மணியரசனுக்கு வாழ்த்துத் தெரிவித்து, பரிசுப் பொருட்கள் வழங்கி, அன்பைப் பகிர்ந்து கொண்டனர். விழா அரங்கிற்கு வெளியே, மணியரசன், கி.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் எழுதிய தமிழ்த்தேசிய நூல்களும், இயற்கை உணவுப் பொருட்களும் பெருமளவில் விற்பனையாயின.
வடஅமெரக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வாழும் பேரியக்கத் தோழர்களின் நிதிப் பகிர்வில், பெ.ம.வுக்கு, மகிழுந்து வழங்கும் ஏற்பாடு உறுதிசெய்யப்பட்டிருப்பதை கி.வெ.அறிவித்தார்.


