12 மணி நேர வேலையா? தொழிலாளர்கள் இரத்தம் சிந்திப் பெற்ற 8 மணி நேர வேலை என்ற உரிமையை இழக்க விடமாட்டோம் என்றும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமையன்று (21.04.23), தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தில் (1948), 65A என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. புதிதாகச் சேர்க்கப்பட்ட இந்தப் பிரிவு, அந்தச் சட்டத்தில் உள்ள 51, 52, 54, 55, 56, 59 ஆகிய பிரிவுகளிலிருந்து தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிக்கும் உரிமையை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது. தமிழக அரசு பிறப்பிக்கும் அரசாணையின் மூலம் எந்த ஒரு தொழிற்சாலைகளுக்கும், மேற்கண்ட பிரிவுகளிலிருந்து விலக்கு அளிக்க முடியும்.
இந்தச் சட்டத் திருத்தம் எந்த அளவிற்கு தொழிலாளர் விரோதமானது என்பதைப் புரிந்துகொள்ள தொழிற்சாலைகள் சட்டத்தில் உள்ள 51, 52, 54, 55, 56, 59 ஆகிய பிரிவுகள் தொழிலாளர்களுக்கு என்னென்ன உரிமைகளை வழங்குகின்றன என்பதை அறிந்துகொள்வது அவசியம்.
பிரிவு 51, எந்த ஒரு தொழிலாளியும் ஒரு தொழிற்சாலையில் ஒரு வாரத்தில் 48 மணிநேரத்தில் அதிகமாக வேலை செய்யக் கூடாது என்பதை உறுதி செய்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்கிறது.
பிரிவு 52, தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாயம் விடுப்பு வழங்க வேண்டும் என்று கூறுகிறது. அத்துடன் எந்த ஒரு தொழிலாளியையும் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக வேலை வாங்கக் கூடாது என்றும் கூறுகிறது.
பிரிவு 54, ஒருநாளில், (உணவு மற்றம் இதர இடைவேளைகளை சேர்த்து) ஒரு தொழிலாளியை 9 மணிநேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது என்று கூறுகிறது.
பிரிவு 55, ஒரு தொழிலாளியை தொடர்ந்து 5 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கக் கூடாது என்பதையும், 5 மணி நேரத்திற்குப் பிறகு கட்டாயம் அரை மணி நேரம் இடைவேளை வழங்க வேண்டும் என்றும் கூறுகிறது.
பிரிவு 56, வேலை நேரம், இடைவேளைகள் (பிரிவு 55 உட்பட) என அனைத்தும் சேர்த்து ஒரு தொழிலாளியை பத்தரை மணி நேரத்திற்கு மேல் தொழிற்சாலையில் இருக்கச் செய்யக் கூடாது.
பிரிவு 59, ஒரு தொழிலாளி வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேலோ அல்லது ஒரு தினத்தில் 9 மணி நேரத்திற்கு மேலோ வேலை செய்தால் கூடுதலாக அவர் வேலை செய்யும் நேரத்திற்கு (Overtime) வழக்கமாக வழங்கப்படும் கூலியை விட இரண்டு மடங்கு அதிகமாக வழங்க வேண்டும் என்று கூறுகிறது.
ஆகவே, 8 மணி நேரம் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்வது, வாரம் ஒரு நாள் கட்டாய விடுப்பை உறுதி செய்வது, தொழிலாளர்களை மணிக் கணக்கில் இடைவேளை இல்லாமல் வேலை வாங்குவதைத் தடுப்பது, தொழிற்சாலையில் மணிக் கணக்கில் தொழிலாளர்களை வைத்திருப்பதை தடுப்பது மற்றும் 8 மணி நேரத்திற்கு மேல் செய்யும் கூடுதல் வேலைக்கு இரண்டு மடங்கு கூலி கிடைப்பதை உறுதி செய்வது ஆகிய இப்பிரிவுகள் முதலாளிகளால், தொழிலாளிகள் சுரண்டப்படுவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டவையாகும்.
இவை அனைத்தும் தொழிலாளி வர்க்கம் போராடி, இரத்தம் சிந்திப் பெற்ற உரிமைகளாகும்.
தற்போது தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத் திருத்தம், ஒரு அரசாணையின் மூலம் இந்த உரிமைகள் அனைத்தையும் பறிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த ஒரு தொழிற்சாலைக்கும் தொழிற்சாலைகள் சட்டத்தின் இந்த பிரிவுகளிலிருந்து தமிழ்நாடு அரசு விலக்கு அளிக்க முடியும்.
இவ்வாறு விலக்கு அளிக்கப்படும் பட்சத்தில், ஒரு தொழிலாளியின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயரும். அவர்கள் தொழிற்சாலைக்கு வந்து செல்வதையும் சேர்த்து, வேலைக்காக சுமார் 14 முதல் 15 மணி நேரத்தை செலவிட வேண்டி வரும். இதனால் தொழிலாளர்களின் சமூக தொடர்பு முற்றிலும் அறுபடும். தூங்கி எழுவது, வேலைக்குச் செல்வது, பின் தூங்குவதற்கு வீட்டிற்குத் திரும்புவது என்பதாக, சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் தொழிலாளர்கள் எவ்வாறு இயந்திரங்களைப் போல் வாழ்ந்தார்களோ அதுபோன்ற வாழ்க்கைக்குத் திரும்ப நேரிடும்.
இவ்வாறு அவர்கள் கூடுதலாக வேலை செய்யும் நேரத்திற்கு உரிய ஊதியமும் (Overtime allowance) கிடைக்காது. இவை அனைத்தும் சட்டப்பூர்வமாக நடக்கும் என்பதே கொடுமையிலும் கொடுமை.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை அமைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும், புதிதாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் தொழிலாளர் நலச் சட்டங்களில் இதைப் போன்ற விலக்கை அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பது யாருக்கு சாதகமானது என்பது சொல்லாமல் விளங்கக் கூடியதே.
ஆகவே, மனித சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கும் இந்தக் கொடுமையான சட்டத் திருத்தத்தை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது.
சமூக நீதியின் அடிப்படையில் அமைந்த அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் திமுக அரசு, அது உண்மை என்றால் இந்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
இந்தச் சட்டத்திற்கு இடமளித்தால் நாம் மிகப்பெரிய வரலாற்றுத் தவறை செய்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு, அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும், இந்தச் சட்டத்தை எதிர்க்க ஒன்றிணைய வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.