என்.எல்.சி. விரிவாக்கத்திற்காக நில ஆக்கிரமிப்பு செய்வதற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்…..
நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம், இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் காவல்துறையை வைத்து வலுக்கட்டாயமாக நிலப்பறிப்பில் ஈடுபடுவதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். மண்ணின் மக்களின் நிலவுரிமையை பாதுகாக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, நிலம் பறிப்பதற்கான இடை அமைப்பாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் அமைப்பற்காக, மின் உற்பத்தி நிலையம் நிறுவுவதற்காக 1956ஆம் ஆண்டில் தொடங்கி பல்வேறு கட்டங்களில் 37,250 ஏக்கர் நிலத்தை என்.எல்.சி. கையகப் படுத்தியுள்ளது.
சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி நிலையம், அலுவலகங்கள், ஊழியர் குடியிருப்புகள் போன்றவற்றிற்குப் பயன்படுத்தியதுபோக, இன்னும் பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் என்.எல்.சி. நிர்வாகம் கையில் இன்னும் இடமிருக்கிறது. இந்நிலையில், வளையமாதேவி, கரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கூடுதல் நிலம் கையகப்படுத்த முனைவது திட்டமிட்ட ஆக்கிரமிப்பே அன்றி, வேறல்ல!
ஏற்கெனவே, நிலம் கொடுத்த மக்கள் என்.எல்.சி.யின் வாக்குறுதிப்படி இழப்பீடோ, வேலை வாய்ப்போ கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.
1980களுக்கு முன்பு வரை நிலம் கொடுத்த மக்களுக்கு ஒப்பந்தப் பணியும், தமிழ்நாட்டு இளையோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கி வந்த என்.எல்.சி. நிறுவனம், மண்ணின் மக்களுக்கு வேலை வழங்குவதை நிறுத்திவிட்டது. மாறாக, வெளி மாநிலத்தவர்களே, வேலை வாய்ப்பு பெற்று நெய்வேலியில் குவிகிறார்கள். அண்மையில் கூட, பொறியாளர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 299 பேரில், ஒருவர் கூட தமிழர் இல்லை! அனைவருமே இந்திக்காரர்கள் மற்றும் பிற மாநிலத்தவர்கள்!
ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியும், உச்ச நீதிமன்றத்தை அணுகியும் பணி நிரந்தரத்திற்கான ஆணை பெற்றார்கள். ஆனால், அது இன்று வரை முழுமையாக செயல்படவில்லை. தொடர்ந்து பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், இன்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும், அவ்வாறு சேர்ந்தவர்களுக்கு பணி நிரந்தரத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக அதுவும் நிறுத்தப்பட்டது. இப்போதுகூட, வலுக்கட்டாயமாக நிலம் பெறுபவர்களிடம் 3 மாதத்திற்குத்தான் ஒப்பந்தப் பணி என என்.எல்.சி. நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்கிறது. இவர்களை இன்கோசர்வ் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகச் சேர்க்க முடியாது என்றும் அறிவித்துவிட்டது.
இன்னொருபுறம், சுரங்கப் பணிக்காக மிகையாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நெய்வேலியிலிருந்து தொலைவில் உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்குடி பகுதிகளில் கூட நிலத்தடி நீர் மட்டம் கிட்டத்தட்ட ஆயிரம் அடிக்குக் கீழ் சென்றுவிட்டது. புவனகிரி வரை வீட்டுச் சுவர்களில் விரிசல் விழுகிறது. நிலம் உள்வாங்கப்படும் ஆபத்து இருக்கிறது.
இந்நிலையில், தேவைக்கு அதிகமான அளவில் புதிதாக நில ஆக்கிரமிப்பில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபடுவதும் அதற்கு தமிழ்நாட்டு அமைச்சர்கள் துணை போவதும் கண்டிக்கத்தக்கது.
எனவே, என்.எல்.சி. நிர்வாகமும் இந்திய அரசின் சுரங்கத்துறையும் இந்த நில ஆக்கிரமிப்பை உடனே கைவிட வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.