
தமிழ்நாட்டில் இணையதள சூதாட்டங்கள் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு அடிமையான பலர், பணத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துள்ளனர். இதுவரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இதனால் இணையதள சூதாட்டங்களைத் தடுப்பதற்காக அதிமுக ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சட்டம் கொண்டு வருவதற்கு சரியான தரவுகள் கூறப்படவில்லை என்று கூறி அந்தச் சட்டத்தை நீதிமன்றம் இரத்து செய்தது. மேலும், இதுபோன்ற சட்டங்கள் வலுவான சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 10.6.2022 அன்று சட்டசபையில் இணையதள சூதாட்டங்கள் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி, இணையவழி சூதாட்டத்தைத் தடுக்கப் புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது.
இக்குழு 27.6.2022 அன்று தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை அதே நாளில் நடந்த அமைச்சரவையின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின், பள்ளி மாணவர்கள் மீது இணையவழி விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றி பள்ளிக்கல்வித்துறை மூலமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு, பொது மக்களிடம் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் கருத்து பகிர்வோர்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், சட்டத்துறையின் ஆலோசனையுடன் ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 29.8.2022 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் அவசரச் சட்டம் மேலும் மெருகூட்டப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டு, மீண்டும் முழு வடிவில் அமைச்சரவைக்கு வைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு பின்னர் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த அவசரச் சட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலைப் பெறுவதற்காக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது அனுப்பிவைக்கப்பட்ட அன்றைய தினமே ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து இணையதள சூதாட்டங்களுக்கு எதிரான அவசரச் சட்டம் வெளியிடப்பட்டது.
அந்த அவசரச் சட்டத்தை நிரந்தர சட்டமாக நிறைவேற்றும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி தமிழக சட்டசபையில், இணையதள ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது.
அந்தச் சட்டமுன்வடிவு, அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அது ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டது.
அவசரச் சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்த ஆளுநர், அதற்கான சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் இணையதள சூதாட்டத்தினால் தற்கொலைகளும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதனால் சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநருக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில், அந்த சட்டமுன்வடிவு தொடர்பாக தமிழக அரசிடம் சில கேள்விகளை ஆளுநர் எழுப்பினார். அதற்கு விளக்கம் அளிக்கும்படி அரசை கேட்டுக்கொண்டார். ஆளுநரிடம் இருந்து அந்த கடிதம் வந்த 24 மணி நேரத்தில் 2022 நவம்பர் 25 ஆம் தேதி தமிழக அரசு விளக்கம் அளித்தது. மேலும், சட்டத்துறை அமைச்சர் இரகுபதி அதற்கான விளக்கத்தை ஆளுநர் மாளிகைக்குச் சென்று நேரில் அளித்தார்.
அந்தச் சட்டத்தின் மீதான சில சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றபின்பு ஒப்புதல் தருவதாக ஆளுநர் தெரிவித்ததாக அமைச்சர் இரகுபதி கூறினார். ஆனாலும் அந்த சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலதாமதம் செய்துவந்தார் ஆளுநர்.
இந்த நிலையில் அவசரச் சட்டம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியுடன் காலாவதி ஆனது. எனவே இணையதள சூதாட்டத்தில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு ஒரே ஆதாரமாக அந்த சட்ட முன்வடிவு மட்டுமே இருந்தது.
ஆனாலும் அதற்கு உடனடியாக ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.இந்தச் சூதாட்டத்தினால் மட்டும் இதுவரை 44 பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இணையதள ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திருப்பி அனுப்பிவைத்தார். அது நிறைவேற்றப்பட்டு 139 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பப்பட்டது.
அந்தச் சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆா்.என்.ரவி விளக்கம் அளித்து உள்ளார். அதில், இணையதள சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் சட்டம் கொண்டுவர தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார். சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முகாந்திரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதன் அடுத்த கட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பான சட்டமுன்வடிவும் இதுபோல திருப்பி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளுநரின் இந்தச் செயலுக்கு அரசியல்கட்சித்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.


