தங்கக்கவச விவகாரம் – தோல்வியில் முடிந்தது எடப்பாடி அணியின் முயற்சி

குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அணிவிக்கும் தங்கக்கவசத்தை வங்கியிலிருந்து எடுக்கும் விவகாரம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நினைவிடப் பொறுப்பாளரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் ரூ.4.5 கோடி மதிப்பிலான 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசம், இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு ஜெயலலிதாவால் அணிவிக்கப்பட்டது. இந்த தங்கக்கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள ஒரு வங்கியில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் 28 முதல் 30 வரை கொண்டாடப்படும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவிற்கு, அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் ஆகிய இருவரும் வங்கியிலிருந்து தங்கக்கவசத்தை கையெழுத்திட்டு எடுத்து வருவர்.

பின்னர் அந்தத் தங்கக்கவசம் தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.

2017 ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, அப்போது தங்கக்கவசத்தை வங்கியில் யார் பெறுவது? என சர்ச்சை ஏற்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பும், டி.டி.வி தினகரன் தரப்பும் உரிமை கொண்டாடி தனித்தனியாக வங்கிக்குக் கடிதம் அளித்தனர்.

அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகம் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் முன்னிலையில் அப்போதைய மதுரை ஆட்சியரிடம் வழங்கியது.

தற்போதும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும், ஓபிஎஸ் தலைமையிலும் தனித்தனியாகச் செயல்படுகிறது.

இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடந்து ஓ.பன்னீர்செல்வம், நான் தான் அதிமுகவிற்கு ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் இருந்து வருகிறேன். எனவே வங்கிக்கணக்கு சம்பந்தமாக எந்த பரிவர்த்தனைகளும் நடக்கக்கூடாது என வங்கிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதைத்தொடர்ந்து இப்போது, இம்முறை யார் தங்கக்கவசத்தைப் பெறுவது? என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

இதனால், எடப்பாடி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், காமராஜ், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் மற்றும் ராஜன்செல்லப்பா, இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் நேற்று பசும்பொன் சென்றனர்.

தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பொறுப்பாளர் காந்திமீனாள் மற்றும் உறவினர்களிடம் வங்கியில் கொடுக்க உள்ள மனுவை அளித்தனர். இதில் கையெழுத்துப் போட்டுத் தாருங்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தாருங்கள் எனக் கேட்டு முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட ஒரு சிலர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் உள்ளிட்ட உறவினர்கள், ஓபிஎஸ், இபிஎஸ் என யாருக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவு தர முடியாது. மதுரை வங்கி மற்றும் அரசு எடுக்கிற முடிவு எதுவாயினும் ஒத்துழைப்பு அளிப்போம் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி அணி அதிமுக நிர்வாகிகள் அனைவரும் புறப்பட்டுச் சென்றனர். மீண்டும் இருதரப்பினரும் வங்கியில் கூட வாய்ப்புள்ளதால், பிரச்னையின்றி தங்கக்கவசத்தை பசும்பொன் எடுத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Response