ஆரிய பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பரப்புரை – பெ.மணியரசன் அறிவிப்பு

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு கூட்டம் 04.09.2022 மாலை இணையவழியில் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தேனி மாவட்டம் – குச்சனூர் இராசயோக சித்தர் பீட – வடகுரு மடாதிபதி குச்சனூர் கிழார், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் சித்தர் மூங்கிலடியார், தெய்வத்தமிழ்த் திருமுறை வழிபாட்டு இயக்கத் தலைவர் சிவ.வெ.மோகனசுந்தரம் அடிகளார், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், வள்ளலார் பணியகம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் க.இராசமாணிக்கனார், ஆசீவகம் சமய நடுவம் நிறுவனர் முனைவர் ஆசீவக சுடரொளி, வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் (தமிழ்ச் சித்தர் பேரவை, கரூர்), தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர்கள் முனைவர் வே. சுப்பிரமணிய சிவா (சிதம்பரம்), வே.பூ.இராமராசு (திருச்சி), வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் (புதுச்சேரி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஏற்கெனவே உள்ள அரசாணையின்படி தமிழ்நாடு அரசு 2021 ஆகத்து மாதம் அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருந்த 24 பேரை பல்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக அமர்த்தியது. இதை எதிர்த்தும், ஆகமக் கோயில்களில் அந்தந்த ஆகமம் சார்ந்த குடும்ப வாரிசுகளே அர்ச்சகராகலாம் என்று ஆணையிட வலியுறுத்தியும் ஆதிசைவ சிவாச்சாரியர்கள் சங்கமும் மற்றும் சில ஆரியத்துவாவாதிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டனர்.

இவ்வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முனீசுவரநாத் பண்டாரி – நீதிபதி என். மாலா அமர்வு, 22.08.2022 அன்று அளித்த தீர்ப்பில், தமிழ்நாட்டிலுள்ள 40,000க்கும் மேற்பட்ட கோயில்களில் ஆகமக் கோயில்கள் எவை, அல்லாதவை எவை என்று கண்டறிய பணி ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அதில், பிராமணர்கள் சார்பாக சமற்கிருதக் கல்லூரியின் நிர்வாகக் குழுத் தலைவர் என். கோபால்சாமியை உறுப்பினராகவும் நீதிமன்றமே அமர்த்தியது. எஞ்சியோரை தமிழ்நாடு அரசு அமர்த்த வேண்டும் என்றது.

இந்தக் குழுவினுடைய அறிக்கை வந்த பிறகுதான், ஆகமக் கோயில்களை உறுதி செய்து, அந்தந்த ஆகமத்தைச் சேர்ந்த குடும்பத்தினரை அர்ச்சகராக்கலாம், அதுவரை புதிதாக எந்த அர்ச்சகரும் அமர்த்தக் கூடாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகம விதிகளின் படியே இந்த அர்ச்சகர் நியமனங்கள் நடைபெற வேண்டுமெனக் கூறி, தமிழர்களுக்குத் தொடர்பில்லாத ஆரிய கோத்திரங்களில் பிறந்த பிராமணர்களையே கோயில் அர்ச்சகர்களாக அமர்த்த இத்தீர்ப்பு வழிவகுத்துள்ளது. ஆரிய பிராமணர்களின் கோரிக்கையை இத்தீர்ப்பு நிறைவேற்றியுள்ளது. இந்தத் தீர்ப்பு, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு வந்தது என்று நீதிபதிகள் தீர்ப்புரையில் கூறுகிறார்கள். அவர்களின் கூற்றுக்குச் சான்றாக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரத்தின் ஆதரவு வாதங்களை தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் 1972இல் அளித்த சேசம்மாள் – எதிர் – தமிழ்நாடு அரசு வழக்கில் அளித்த தீர்ப்பிலும், 2015இல் ஆதிசைவ சிவாச்சாரியர்கள் சங்கம் – எதிர் – தமிழ்நாடு அரசு வழக்கில் நீதிபதி இரஞ்சன் கோகோய் அமர்வு அளித்த தீர்ப்பிலும் ஆகமங்கள் அர்ச்சகர் ஆவதற்கு சாதிகளை நிபந்தனை ஆக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். அதுமட்டுமின்றி, ஏதாவதொரு ஆகுமம் சாதி அடிப்படையில் அர்ச்சகர் நியமிக்க வேண்டுமெனக் கூறினால், அது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, அதைப் பின்பற்றத் தேவையில்லை என்றும் அத்தீர்ப்பில் கூறியுள்ளார்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, பரம்பரை அடிப்படையில் பிராமண அர்ச்சகர்கள் வருவதற்கும், பிராமணரல்லாத தகுதியுள்ள மக்கள் அர்ச்சகர் ஆகாமல் தடுப்பதற்கும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு ஆதரிக்கிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளிப்படையாகவே செய்தியாளர்களிடம் பாராட்டு கூறியுள்ளார். பா.ச.க.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையும் இந்தத் தீர்ப்பு மிகச் சிறப்பான தீர்ப்பு என வரவேற்றுள்ளார்.

சமூக சமநிலைக்கும், சனநாயகத்திற்கும், மரபுவழிப்பட்ட தமிழர் ஆன்மிகத்திற்கும் எதிரான – மேற்கண்ட வர்ணாசிரம வாதத் தீர்ப்பை தெய்வத் தமிழ்ப் பேரவை முழுமையாக எதிர்க்கிறது. தமிழர்களுடைய சிவநெறி, திருமால்நெறி, சித்தர்நெறி, ஆசீவகநெறி, வைகுண்டர் வழி, வள்ளலார் வழி – எதிலும் சாதி அடிப்படையில் அர்ச்சகர் அமர்த்த வேண்டுமென்ற எதிலும் கூறவில்லை. மேலும், சமூகத்தில் நிலவும் வர்ணசாதி உயர்வு தாழ்வை எதிர்த்தே நம்முடைய தமிழர் ஆன்மிக நெறி – கருத்துகளை வழங்கியுள்ளது.

எனவே, தகுதியுள்ள அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக அமர்த்திட உடனடியாகத் தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! வர்ணாசிரமவாதிகளின் பிராமணிய ஆதிக்கத்திற்கு எள்ளளவும் தமிழர் ஆன்மிகத்தில், தமிழ்நாட்டுக் கோயில்களில் இடம் கொடுக்கக் கூடாது! உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அக்குழுவை தமிழ்நாடு அரசு அமைக்காமல், உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு போட வேண்டும்.

தமிழ்நாட்டின் அர்ச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது. தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அர்ச்சனை மொழி! மக்களிடம் இக்கருத்துகளை எடுத்துச் சொல்வதற்காக, “தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்ற முழக்கத்தோடு, தமிழ்நாடெங்கும் 2022 அக்டோபர் 15 வரை தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் விளக்கப் பொதுக் கூட்டங்களை – கருத்தரங்குகளை நடத்துவதென்று தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு முடிவு செய்கிறது! இக்கருத்துகளை விளக்கும் வகையில், இரண்டு நூல்களை தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் வெளியிட்டு, அவற்றை பொதுமக்களிடம் பரப்புரைக்குக் சொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Response