காந்தி உள்ளிட்ட வடநாட்டார் கண்டுகொள்ளாத வ.உ.சி – தமிழர்கள் கொண்டாடுவோம்

வ உ சி – 150

வஉசிதம்பரனார் ( 1872 – 1936 ) அவர்களின் 150-ஆவது பிறந்தநாள் இன்று.

வஉசி அவர்கள் இந்திய விடுதலைப் போரில் செய்த தியாகத்திற்கு ஈடு இணை இருக்க முடியாது. அந்த அளவிற்குத் தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் மக்களுக்காக ஈகம் செய்தவர் அவர்.

ஆனால், நீண்ட காலப் புறக்கணிப்பிற்குப் பின், இந்த 150 ஆவது பிறந்தநாளை ஒட்டித்தான், இன்று பொதுவெளியில் அவர் பேசுபொருளாக மாறியுள்ளார்.

இன்றைய தமிழக அரசு இயன்ற அளவு அவரைப் பெருமைப் படுத்தும் முன்னெடுப்புக்களைச் செய்து வருகிறது. ஆனால், வட நாட்டில் வஉசி அவர்களை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அவருக்கு உரிய அங்கீகாரத்தை ஒன்றிய அரசோ, வரலாற்று ஆசிரியர்களோ வழங்கவே இல்லை என்பது கொடுமையிலும் கொடுமையாகும்.

எடுத்துக்காட்டாகச் சிலவற்றைப் பட்டியலிட முடியும். அகமதாபாத் நவஜீவன் பிரசுராலயம் காந்தியாரின் 100 தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த 100 நூல்களில் வ உ சி பெயர் எங்குமே இல்லை.

“சத்திய சோதனை” நூலில் வட இந்தியத் தலைவர்கள் பலருடைய பெயரையும் குறிப்பிட்டுள்ள காந்தியார், வஉசியின் பெயரை குறிப்பிடவே இல்லை. காந்தியாரைத் திண்ணையிலே உட்கார வைத்து அவமதித்த சீனிவாச சாஸ்திரியாரைப் பற்றிக்கூட காந்தியார் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால்
வ உ சி அவர்களது பெயர் அவரது நினைவுக்கு வரவே இல்லை.

அடுத்து பட்டாபி சீதாராமய்யர் “காங்கிரஸ் கட்சி வரலாறு” எனும் புத்தகத்தை எழுதி உள்ளார். அந்தப் புத்தகத்தில் கூட வ.உ.சி அவர்களின் பெயரை ஐயர் குறிப்பிடவில்லை.

காந்தியின் செயலாளராக இருந்தவர் மகாதேவ தேசாய். 1917 முதல் 1942 வரை 25 ஆண்டுகள் காந்தியிடம் செயலாளராகப் பணியாற்றியவர்.

“Day to Day with Gandhi” எனும் பெயரில் காந்தியைச் சந்தித்த அனைவரது பெயர்களையும் அந்நூலில் அவர் பதிவு செய்துள்ளார். அவை ஒன்பது தொகுப்பு நூல்களாக வெளிவந்துள்ளன. ஆனால், அந்த நூலிலும் வஉசி அவர்களது பெயரை அவர் குறிப்பிடவே இல்லை.

வஉசி தென்னாட்டைச் சார்ந்தவர். பார்ப்பனர் அல்லாதவர். இது போதும், அவரை ஓரம் கட்டுவதற்கு!

இப்படிப் பலராலும் புறக்கணிக்கப்பட்டவராக இருப்பினும் வ.உ.சி அவர்கள் நாட்டிற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.

காந்தியாருக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார் —
“எனது தேசப்பற்றாளர்களுக்காக எனது வாழ்க்கை முழுவதையும் நான் செலவிட ஆயத்தமாக உள்ளேன். என்னுடைய அனைத்து நேரமும் எனது நாட்டுக்கும், நாட்டின் மீது பற்றுள்ளவர்களுக்கு மட்டுமே ஒதுக்க விரும்புகிறேன். இவை இரண்டிற்கும் பிறகுதான் கடவுளுக்கே கூட நேரம் ஒதுக்குகிறேன்”

அதுமட்டுமல்ல! சமூகத்தில் உயர்சாதி எனக் கருதப்படும் சாதியில் பிறந்திருந்தாலும், இராமையா தேசிகர் மற்றும் சாமி சகஜானந்தர் ஆகிய பட்டியலினத்தைச் சார்ந்தவர்களைத் தனது வீட்டிற்குள்ளேயே வைத்துப் பல காலம் பேணியவர். இன்று கூட இப்படிப்பட்ட சாதிமறுப்புச் செயல்பாடுகளை முன்னெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!

எனவே தமிழர்களாகிய நாம்தான் வஉசி அவர்களைக் கொண்டாட வேண்டும். தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் அவர் ஆற்றிய பணிகளை உரக்கப் பேசுவோம். வஉசி அவர்களது தியாகத்தைச் சலிக்காமல் பரப்புரை செய்வோம்.
இந்தியா, பிறகு நம்மைப் பின்பற்றட்டும்.

– கண.குறிஞ்சி

Leave a Response