ஜூன் 23 ஆம் நடந்த அதிமுகவின் பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து அறிவிப்பு செய்திருந்தனர்.
இந்தக் கூட்டத்தில், எடப்பாடி தரப்பினர்,ஓபிஎஸ்ஸால் முன்மொழியப்பட்ட அனைத்துத் தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது என்று அறிவித்து விட்டனர்.
இந்த அறிவிப்பைப் பொதுக்குழுவில் சொன்னதற்கான காரணமே, சமீபத்தில் நடந்து முடிந்த அதிமுகவின் உட்கட்சித் தேர்தலை அங்கீகரிக்குமாறு ஒரு தீர்மானமும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்தது. இப்போது அந்தத் தீர்மானத்தையும் நிராகரித்து விட்டதால், அதிமுக உட்கட்சித் தேர்தல் செல்லாததாகிவிடும். எனவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாததாகி விடும். பிறகு பொதுக்குழுவைக் கூட்டி, எடப்பாடி பழனிச்சாமியைப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்து விடலாம் என்பதுதான் திட்டம் என்று கூறப்படுகிறது.
ஆனால், அதிமுக உட்கட்சித் தேர்தலில்தான் பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக உட்கட்சித் தேர்தலே செல்லாது என்றால் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளும் செல்லாததாகிவிடும். அப்படி என்றால், இந்தப் பொதுக்குழுவே முதலில் செல்லத்தக்க பொதுக்குழு அல்ல என்பதாகும். இந்தப் பொதுக்குழுவே செல்லாது என்றால், தமிழ்மகன் உசேனின் புதிய பதவியும் செல்லாது. அதிமுக உட்கட்சித் தேர்தல் நடத்துவதற்கு முன்பு என்ன நிலை இருந்ததோ அதுதான் தொடரும். அதாவது பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர், பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர். இனி மறுபடியும் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டுமென்றால், பன்னீர்செல்வம், பழனிச்சாமி ஆகியோர் கையெழுத்திட்டுத் தான் கூட்ட முடியும்.
இதனால், 11.7.22 இல் கூடுவதாகச் சொன்ன பொதுக்குழு அறிவிப்பே செல்லாததாகிவிடும் என்கின்றனர் அதிமுக மூத்த நிர்வாகிகள்.