தமிழ்நாட்டு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே என்கிற கோரிக்கையை வலியுறுத்தி வரும் சூலை 11 அன்று கோவை அஞ்சல்துறைத் தலைமை அதிகாரி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதன்விவரம்…
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 22.05.2022 அன்று, கடலூர் மாவட்டம் – பெண்ணாடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் அ.ஆனந்தன், துணைத் தலைவர் க.முருகன், துணைப் பொதுச்செயலாளர் க.அருணபாரதி, நா.வைகறை, பழ.இராசேந்திரன், கோ.மாரிமுத்து, க.விடுதலைச்சுடர், மா.மணிமாறன், வே.க.இலக்குவன், இரா.வேல்சாமி, முழுநிலவன், வெ.இளங்கோவன், கதிர்நிலவன், வெற்றித்தமிழன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், அண்மையில் காலமான தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பூதலூர் ஒன்றியத்திச் சேர்ந்த நந்தவனப்பட்டி ஆரோக்கியசாமி, சென்னை சாமி ஆகியோர்க்கும், தஞ்சைக் களிமேட்டில் அப்பர் விழா சப்பர விபத்தில் இறந்த 11 பேர்க்கும் இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் – 1
தமிழ்நாட்டு வேலைகள், தொழில், வணிகம் தமிழர்களுக்கே!வரும் சூலை 11 அன்று கோவை அஞ்சல்துறைத் தலைமைஅதிகாரி அலுவலகம் முற்றுகை!
தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் திட்டமிட்ட வகையில் குவிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண அத்துக்கூலி வேலைகள் தொடங்கி, இந்திய அரசுப் பணிகள் வரை அயலாரின் ஆக்கிரமிப்பு வெள்ளம் புகுந்து வருகிறது.
இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டின் அஞ்சலக எழுத்தர் போன்ற பணிகளுக்கான தேர்வுப் பட்டியல் கடந்த 10.02.2022 அன்று வெளியிடப்பட்டபோது, அதில் தேர்வு செய்யப்பட்ட 946 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 46 மட்டுமே எனத் தெரிய வந்தது. பெரும்பாலான பெயர்கள் கல்பித், பவார், சிபு, அனுப், சாகா, மண்டல், சிங், லங்கா, பூனம், நீட்டு, மிஷ்ரா, பண்டிட், கௌரவ், மித்ரா போன்ற பெயரொட்டுடனான வடநாட்டவர்களின் பெயர்கள்!
அடுத்து, நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பட்டதாரி நிர்வாகப் பொறழயாளர் பயிலுநர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வடவர் என சி.பி.எம். நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அம்பலப்படுத்தினார்.
இவ்வாறு, தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசுப் பணிகளில் திட்டமிட்ட முறையில் முறைகேடுகள் வழியாக இந்திக்காரர்களும், வெளி மாநிலத்தவரும் அமர்த்தப்பட்டு, தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இன்னொருபுறத்தில், தமிழ்நாட்டின் முகாமைான தொழில் – வணிகத்திலிருந்து தமிழர்கள் பெரும்பாலும் வெளியேற்றப்பட்டு, மார்வாடிகளும், குசராத்திகளும், ஆந்திரத் தெலுங்கர்களும், மலையாளிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மொத்த வணிகம் அனைத்துமே இவர்களிடத்திலேயே உள்ளது.
ஒரு காலத்தில், உலகிற்கே முன்னெடுத்துக்காட்டான இனமாக தொழில் – வணிகத்தில் சிறந்து விளங்கிய தமிழினம், இன்றைக்கு அயலாரின் ஆதிக்கம் மற்றும் ஏகபோகத்தால், சொந்த தாய் மண்ணிலேயே அண்டிப் பிழைத்து வாழும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டின் தொழில் – வணிகம் – வேலை ஆகியவற்றை தமிழர்களுக்கே உறுதி செய்ய வேண்டும். இதற்கென பிற மாநிலங்களில் உள்ளதைப் போல், தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் வடவர்களைப் பணியமர்த்துவதைக் கைவிட வேண்டும். நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் வெளி மாநிலத்தவர் நுழைவைக் கட்டுப்படுத்த செயலில் உள்ள உள் அனுமதி நுழைவு முறை (Inner Line Permit System) தமிழ்நாட்டிற்கும் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 2022 சூலை 11 – திங்கள் அன்று கோவையிலுள்ள அஞ்சல் தலைமை அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுப்பது என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு ஒருமனமாகத் தீர்மானிக்கிறது!
தீர்மானம் – 2
காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைத்துவிட்டு தன்னாட்சி அதிகாரமுள்ள புதிய ஆணையம் அமைத்திடுக!
இப்பொழுதுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தன்னாட்சி அதிகாரம் இல்லாத ஒரு பொம்மை அமைப்பாக இந்திய அரசினால் 2018 மே மாதம் உருவாக்கப்பட்டது.
தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்திற்கு மேற்படி ஆணையம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்தி வரும். அனைத்தும் வெற்று வேட்டு! ஒருதடவை கூட கர்நாடகம் அதை செயல்படுத்தியதில்லை. அந்த ஆணையைச் செயல்படுத்துமாறு இந்த ஆணையம் வலியுறுத்தியதும் இல்லை. ஆனால், ஆணையக் கூட்டம் ஒவ்வொன்றிலும் கர்நாடக அரசு புதிய அணை கட்டிக் கொள்ள அனுமதி வழங்குவதற்காக, மேக்கேத்தாட்டு அணைத் திட்டத்தைப் பொருள் நிரலில் (அஜண்டாவில்) மேற்படி மேலாண்மை ஆணையம் திணித்து வருகிறது.
அக்கூட்டத்தில் பங்கேற்கும் தமிழ்நாட்டு அதிகாரிகள் மேக்கேதாட்டை விவாதிக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்த பின் – அதை விவாதிக்காமல் நிலுவையில் வைக்கிறது ஆணையம். ஆனால் அடுத்த கூட்டத்தில் மீண்டும் அதே மேக்கேதாட்டு அனுமதியைப் பொருள் நிரலில் சேர்க்கிறது.
மேக்கேதாட்டு அணைகட்டக் கர்நாடகத்திற்கு இந்திய அரசின் நீராற்றல் துறை, நடைமுறையில் அனுமதி கொடுத்துவிட்டது. அத்துடன் அது மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைக் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பி, அங்கு அனுமதியைக் கோரியுள்ளது. இவ்வாறான சட்டவிரோத ஒருதலைச்சார்பு திருப்பணிகளைச் செய்தவர் இந்திய நீராற்றல் துறையின் தலைவராக இருந்த சௌமித்திரகுமார் ஹல்தர்.
பணி ஓய்வு பெற்ற உடன் அதே எஸ்.கே. ஹல்தரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் நிரந்தரத் தலைவராக ஐந்தாண்டுகளுக்குப் பணி அமர்த்தியது மோடி அரசு! காவிரி நீர் உரிமைச் சிக்கலில் கர்நாடகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் துணை செய்வதற்காகவே மோடி அரசு மேற்படி எஸ்.கே. ஹல்தரை பணி ஓய்வுக்குப் பின் மேலாண்மை ஆணையத் தலைவராக்கியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மேலாண்மை ஆணையக் கூட்டத்தை மூன்று முறை தன்னிச்சையாக ஒத்தி வைத்தார் ஹல்தர். மேக்கேதாட்டு அணைக்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிப்பதற்கான திரைமறைவு வேலைகள்தான் இந்த ஒத்தி வைப்பிற்குக் காரணம் என்று பின்னர் தெரியவந்தது.
காவிரித் தீர்ப்பாயம் 5.2.2007இல் வழங்கிய இறுதித் தீர்ப்பில் பக்ரா நங்கல் அணைக்கு இருப்பது போல், அணையின் மதகைத் திறந்து மூடும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட – தற்சார்பான ஓர் அமைப்புதான் காவிரி நீர்ப் பகிர்வை சட்டப்படி சரியாக செயல்படுத்தும்; தன்னாட்சி அதிகாரம் இல்லாத அமைப்பை ஏற்படுத்தினால் “தனது இந்த இறுதித் தீர்ப்பு துண்டுக் காகிதம் தான்; செயலுக்கு வராது” என்று கூறியது. தன்னாட்சி அதிகாரம் உள்ள ஆணையம் அமைக்க வேண்டும் என்ற காவிரித் தீர்ப்பாயத்தின் இப்பகுதியை உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பில் அப்படியே ஏற்றுக் கொண்டது.
கர்நாடக அணைகளைத் திறந்து மூடும் தன்னாட்சி அதிகாரமுள்ள காவிரி ஆணையத்தை மோடி அரசு ஏன் அமைக்கவில்லை? தன்னாட்சி அதிகாரமில்லாத இந்தக் காவிரி ஆணையத்தை முன்பிருந்த அ.தி.மு.க. ஆட்சியும் இப்போதுள்ள தி.மு.க. ஆட்சியும் ஏற்றுக் கொண்டது ஏன்? கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காவிரி நீர் போதிய அளவு தமிழ்நாட்டிற்கு வந்ததற்குக் காரணம் பருவம் தவறிப் பெய்த பெருமழை மட்டுமே!
எனவே, தன்னாட்சி அதிகாரமில்லாத – நடுநிலை தவறிய ஹல்தரைத் தலைவராகக் கொண்டுள்ள இப்போதைய காவிரி மேலாண்மை ஆணையத்தை முற்றிலும் கலைத்துவிட்டு, தன்னாட்சி அதிகாரமும், நடுநிலை தவறாத தலைவர் மற்றும் அதிகாரிகளையும் கொண்ட புதிய ஆணையம் அமைத்திட இந்திய அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது! இவ்வாறான தற்சார்பு ஆணையம் அமைத்திடும் கோரிக்கையை வலியுறுத்துமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்!
தீர்மானம் – 3
பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்!
கடலூர் மாவட்டம் – பெண்ணாடம் பகுதியில் இயங்கி வந்த “ஸ்ரீ அம்பிகா சுகர்ஸ் சர்க்கரை ஆலை” நிர்வாகம், அப்பகுதி கரும்பு உற்பத்தி உழவர்களுக்கு சற்றொப்ப 120 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ள நிலையில், ஆலையை மூடிவிட்டது. தொழிலாளர்களுக்கும் சம்பள நிலுவை வைத்துள்ளது.
இந்நிலையில், சற்றொப்ப இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பெயரில் பல்வேறு இந்திய அரசு மற்றும் தனியார் வங்கிகளில் 200 கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்குத் தெரியாமலேயே கடன் பெற்றுள்ளது, அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம்! இக்கடன்களை வசூலிக்க அவ்வங்கிகள் உழவர்களை அணுகிய பிறகே, ஆலை நிர்வாகம் உழவர்களின் பெயரில் கடன் வாங்கிய செய்தி தெரியவந்தது.
இவ்வாறு மோசடியாகக் கடன் பெற்ற ஆலை உரிமையாளர் மற்றும் பொது மேலாளர்களை கைது செய்து, அவர்களின் சொத்துகளை விற்று கடன்களை அடைப்பதோடில்லாமல், கரும்பு உழவர்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையையும் கொடுக்க வேண்டும். மேலும், இதற்கெல்லாம் வாய்ப்பாக, இந்த ஆலையைத் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இத்தலைமைச் செயற்குழு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது. இதற்காக உழவர்களைத் திரட்டிப் போராடுவோம் என்றும்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு ஒருமனமாகத் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.