1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். இந்தப்படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு நீதிமன்றம், நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கும் 1998 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 1999 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமெனக் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் கருணை மனுக்களை ஆளுநர் பாத்திமா பீவி 1999 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார். ஆளுநரின் அந்த உத்தரவை இரத்து செய்த உச்சநீதிமன்றம், அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது.
இதனையடுத்து 2000 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத்தலைவருக்குக் கருணை மனுக்களை அனுப்பினர். 2000 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை அப்போதைய குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர். இதன்பின்னர் பதவியேற்ற பிரதீபா பாட்டில், 2011 ஆம் ஆண்டு இவர்களின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
11 ஆண்டுகளுக்கு மேலாக கருணை மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டதற்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மூவரையும் தூக்கிலிடத் தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
2014 பிப்ரவரி 18 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மரண தண்டனையை இரத்து செய்து தீர்ப்பளித்தது.
தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி எழுவரும் விடுவிக்கப்படுவதாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகி ஒன்றிய அரசு தடையாணை பெற்றது.
இந்த வழக்கில் ஒன்றிய – மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு, எழுவரையும் 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் ஒன்றிய அரசின் ஒப்புதல் தேவையில்லையென அறிவித்தது.
இதன் பின்னர் 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி,ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியது இதனிடையே உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூவர் அமர்வு 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 161-வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென தீர்ப்பளித்தது. இதன்தொடர்ச்சியாக 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவால்,விடுப்பில் வந்த பேரறிவாளன், தொடர் சிகிச்சை பெற வேண்டி, 10 ஆவது முறையாக விடுப்பு நீட்டிக்கப்பட்டது.
மார்ச் 9 ஆம் தேதி பேரறிவாளனுக்குப் பிணை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அதில், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும், விசாரணை வரம்பு தமிழ்நாடு எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
மேலும், ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161-ன் கீழ் முடிவெடுக்க எந்தத் தடையும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, வழக்கில் 142 ஆவது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது.
இந்திய வரலாற்றில் உச்சநீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதாகும். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் தமிழக ஆளுநர் செய்த கால தாமதம் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது. அவரின் விடுதலை மீது முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது. 28 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு. இதனால் அவரை விடுதலை செய்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் வரவேற்று கொண்டாடிவருகின்றனர்.