இரண்டாண்டுகள் அலைக்கழிக்கப்பட்ட நாம் தமிழர்கட்சியினர் – வழக்காடி வென்ற சி.சங்கர்

தமிழ்நாடு உட்பட இந்திய ஒன்றியம் முழுக்க கொரோனாத் தொற்று உச்சத்தில் இருந்த நேரம். மே 7, 2020 அன்று தமிழ்நாடு முழுக்க மதுக்கடைகளைத் திறக்க அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டிருந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பின்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ஊரடங்குத் தளர்வுகளைக் காரணம்காட்டி மதுக்கடைகளைத் திறக்கும் அறிவிப்பை அரசு வெளியிட்டது.

அதற்கு எதிராக எஸ்.எஸ்.பி.நகர் பொதுமக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தம் வீட்டு முன்பு, மதுக்கடை வேண்டாம் என்கிற பதாகையை ஏந்தி அமைதிவழிப் போராட்டம் செய்த ஈரோடுமேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் துணைத்தலைவர் அ.தமிழ்ச்செல்வன் அவருடைய மனைவி சரண்யா, அவர் வீட்டருகில் வசிக்கும் எண்பது வயது முதியவர் பெருமாள் அவருடைய மகள் கஸ்தூரி ஆகிய நால்வர் மீதும் கொடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு சிறையில் அடைத்தனர்.

அதிலும் பெண்கள் இருவரையும் ஈரோட்டிலிருந்து கோவை மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைத்தனர்.

மதுக்கடை வேண்டாம் என்று அமைதிவழியில் போராடியவர்களைத் தமிழக அரசும் ஈரோடு காவல்துறையும் நடத்திய விதம் கண்டு சமுதாய ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த நடவடிக்கையைக் கண்டித்து நீண்ட அறிக்கை வெளியிட்டார்.

அதேசமயம், பிணை பெறுவது அதன்பின் வழக்கு நடத்துவது என கொரோனா ஊரடங்குக் காலத்திலும் பலமுறை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.

திமுக அரசு வந்தபின்பு கொரோனா காலத்தில் போடப்பட்ட பொய்வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தது.

ஆனால், இந்த வழக்கு திரும்பப் பெறப்படவில்லை.

மீண்டும் அழைப்பாணையின் பேரில் நீதிமன்றத்துக்கு அலைந்தனர்.

இந்நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் அணியின் தமிழகச் செயலாளராகப் பொறுப்பேற்றிற்கும் வழக்கறிஞர் சி.சங்கர், இவ்வழக்கை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

மார்ச் 23 அன்று நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் அரசுத்தரப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் பேச, தம் வலுவான வாதங்களால் இவ்வழக்கு பொய்வழக்கு என்பதையும் எப்படியெல்லாம் ஜோடிக்கப்பட்டது என்பதையும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

அவ்வாதங்களைக் கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கு முகாந்திரம் இல்லை என்று சொன்னதோடு, இந்த வழக்குக்கு இவ்வளவு பிரிவுகள் எதற்கு? என்றும் கேட்டு வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதன்மூலம் ஈரோடு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் நடைபெற்று வந்த STC 2546/2021 என்ற எண் கொண்ட வழக்கு இரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து நாம்தமிழர்கட்சி ஈரோடு மேற்கு தொகுதி துணைத்தலைவர் அ.தமிழ்ச்செல்வன் கூறியதாவது…

வீட்டுமுன் அமைதிவழி எதிர்ப்பு தெரிவித்ததால் என் குடும்பம் மற்றும் எதிர்வீட்டு பெருமாள் குடும்பம் ஆகியன கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தது. அதிலிருந்து விடுதலை என்பது நிம்மதியாக இருக்கிறது. இந்த நேரத்தில் செய்தி அறிந்ததும் தொலைபேசியில் அழைத்துப் பேசியதோடு நீண்ட அறிக்கையும் வெளியிட்ட அண்ணன் சீமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வழக்கை ஈரோடு நீதிமன்றத்தில் நடத்தி பிணை பெற்றுத்தந்த மூத்தவழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களின் மகன் சுபாஷ், அதன்பின் தொடர்ந்து வழக்கை நடத்திய வழக்கறிஞர் மூ.கார்த்திகேயன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பைசாகூடப் பெறாமல் வழக்கை நடத்தி விடுதலை பெற்றுத் தந்த அண்ணன் வ்ழக்கறிஞர் சி.சங்கர் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரம் இதுபோன்ற பொய்வழக்குகளால் சோர்ந்துவிடமாட்டேன், அண்ணன் சீமான் வழியில் தமிழ்ச்சமுதாய நலனுக்காக என்றும் போராடுவேன் என்கிற உறுதியையும் இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறேன் என்கிறார்.

Leave a Response