குஜராத்தில் தொடர்ந்து பிடிபடும் பல கோடி போதைப் பொருள்கள் – பின்னணியில் யார்?

பாகிஸ்தானிலிருந்து குஜராத் வழியாக இந்தியாவுக்குள் போதைப் பொருட்கள் கடத்தும் முயற்சி தொடர்கதையாக உள்ளது.மீன்பிடி படகுகள் உட்பட பல வகைகளில் குஜராத்துக்குள் போதைப்பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதைத் தடுக்க, இந்திய கடலோரக் காவல் படை (ஐசிஜி) போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானிலிருந்து வந்த ஒரு படகைச் சிறை பிடித்தனர். அதில் இருந்த ரூ.600 கோடி மதிப்பிலான 87 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்ததாக இந்திய கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது. மேலும் படகில் இருந்த 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், குஜராத் கடல் பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றும் ஐசிஜி, என்சிபி மற்றும் ஏடிஎஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த இந்திய மீன்பிடிப் படகை இடைமறித்துச் சோதனையிட்டனர். அதில் இருந்த 173 கிலோ போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அந்தப் படகில் இருந்த இருவரைக் கைது செய்தனர்.

கடந்த மாதம் ரூ.400 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களுடன் வந்த படகை இந்திய கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது. அதில் இருந்த 6 பாகிஸ்தானியர்களை கைது செய்தது. இதுபோல கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3,300 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 5 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து குஜராத்தில் போதைப்பொருள்கள் சிக்கிக் கொண்டிருப்பது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இது குஜராத்தைப் பல ஆண்டுகளாகவும் ஒன்றியத்தை இரண்டு முறையும் ஆட்சி செய்யும் பாஜகவின் தோல்வி என்று பலரும் சொல்கிறார்கள்.

இதன் பின்னணியில் பாஜகவின் முக்கியப் புள்ளிகள்தாம் இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவோரும் உண்டு.விசாரணை சரியாக நடந்தால் எது சரி? என்பது புலனாகும் என்றும் சொல்கிறார்கள்.

Leave a Response